தமிழ் சினிமாவில் ஒன்று இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தவுடன் பிரபலமாகிவிட்ட இயக்குநர்கள் என ஒரு சில இருப்பார்கள். அப்படி 1998ஆம் ஆண்டு முரளி, சுவலட்சுமி, மணிவண்ணன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான 'தினந்தோறும்' திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் நாகராஜ். அப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததால் அவரை அனைவரும் 'தினந்தோறும்' நாகராஜ் என்றே அழைத்தனர். அப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் கெளதம் மேனன் இயக்கிய மின்னலே, காக்க காக்க உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களுக்கு வசனங்களை நாகராஜ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இயக்குநர் நாகராஜ் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டபோது தனது திரைப் பயணத்தில் அவர் தவறவிட்ட அற்புதமான வாய்ப்பு குறித்து மனவேதனையுடன் பேசி இருந்தார். மிகவும் திறமையான ஒரு இயக்குநராக இருந்த போதிலும் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த காரணத்தால் அவர் மீது நம்பிக்கை இல்லாமல் பலரும் வாய்ப்பு கொடுக்க மறுத்துள்ளனர்.
சினிமாவில் ஜெயிக்காமல் தோற்றுப் போய் இருந்தால் வலி இருந்து இருக்காது. ஆனால் ஒரு நூறு நாள் ஓடும் வெற்றிப்படம் ஒன்றை கொடுத்த பின்னர் ஒண்ணுமே இல்லாமல் போனவர் இயக்குநர் நாகராஜ். அந்த மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிட்டது.
அப்படி ஒரு சம்பவம் பற்றி இயக்குநர் நாகராஜ் கூறுகையில் "எஸ்.ஏ. சந்திரசேகர் ஆஃபீஸூக்கு வரச்சொல்லி நடிகர் விஜய் என்னிடம் கதை கேட்டார். அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்து போனதால், உடனடியாக கால்ஷீட் டேட்ஸ் கொடுத்து அடுத்த நாள் அக்ரிமெண்ட் போட வரச்சொல்லி இருந்தார்.
அடுத்து நாள் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆபீஸுக்கு அதே தப்பை பண்ணிட்டு போய் நின்னேன். ஒரு இயக்குநர் இப்படி போய் நின்னா யார் தான் வாய்ப்பு குடுப்பாங்க. அப்பவும் இப்ப என்ன தப்பு பண்ணிட்டேன் என நான் கேட்கிறேன். குடிச்சு இருந்தாலும் நான் நல்லா படம் பண்ணுவேன் அப்படினு விவாதம் பண்ணேன். எஸ்.ஏ.சி சாருக்கு பிடிக்காததால முடியாதுன்னு சொல்லிட்டார்.
இதனால் விஜய்யை வைச்சு படம் பண்ற நல்ல வாய்ப்பை இழந்துட்டேன். எல்லாரும் சொல்வாங்க, குடிச்சு இருந்தா நிறைய சீன் வரும். குடிச்சா சீன் எல்லாம் வராது, வியாதி தான் வரும். சீனை தவிர பிபி, சுகர் என மத்ததெல்லாம் தான் வரும். பிராக்டிகலா சொல்லனும்னா அந்தத் தீய பழக்கத்திற்கு உள்ள வரைக்கும் போயிட்டு வந்தவன் நான். ஹெல்த் நல்லா இல்லைனா எதுவுமே பண்ண முடியாது" என்று பேசிள்ளார் இயக்குநர் நாகராஜ்.
“குடிப்பழக்கத்தால் என்னுடைய வாழ்க்கை, குடும்பம், நண்பர்கள், நம்மை சார்ந்து இருந்தவர்கள் எல்லாரையும் இழந்துவிட்டேன். நான் இப்படி போயிட்டனே என ஆத்மார்த்தமாக என்னை நல்வழிப்படுத்த நிறைய பேர் இருந்தார்கள். நான் இன்று இந்த நிலைக்கு திரும்பி வந்துள்ளேன் என்றால் அதற்கு நிறைய பேருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்” எனப் பேசியுள்ளார் இயக்குநர் நாகராஜ்.