தங்களது ரசிகர்கள் மறைந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு சூர்யா, கார்த்தி இருவரும் நேரில் சென்று ஆறுதல் சொன்ன சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக திரையுலகம் சார்ந்த பிரபலங்களுக்கு வயது வித்தியாசம் இல்லாமல் ரசிகர்கள் உள்ளனர். பெரும்பாலான பிரபலங்கள் தங்கள் ரசிகர்களின் இல்லங்களில் நடைபெறும் சுக நிகழ்வுகளுக்கு உதவிகளையும், துக்க நிகழ்வுகளுக்கு ஆறுதலையும் தெரிவித்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் சூர்யா, கார்த்தி இருவரும் செய்த சம்பவம் ஒன்று பாராட்டைப் பெற்றுள்ளது. 

நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தின் சிவகங்கை மாவட்ட செயலாளர் NGO பாபு உடல் நலம் சரியில்லாமல் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி காலமானார். இதனையறிந்த கார்த்தி சில தினங்களுக்கு முன் நேரில் சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பாபு படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அதேபோல் நடிகர் சூர்யாவின் நற்பணி இயக்கத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் மணிகண்டன்  கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி சாலை விபத்தில் இறந்தார். அவரின் மறைவுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த இரண்டு சம்பவங்களும் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துக்க நிகழ்வுகளில் தங்களுக்கு ஆறுதலாக இருந்த இருவருக்கும் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

சூர்யா- கார்த்தி திரைப்பயணம் 

  • தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா அடுத்ததாக சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் 10க்கு மேற்பட்ட மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் 13 விதமான கேரக்டரில் சூர்யா நடிக்கிறார். கங்குவா படத்தின் மூலம் திஷா பதானி ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகிறார். இப்படம் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வாடிவாசல், புறநானூறு உள்ளிட்ட படங்களில் சூர்யா நடிக்கவுள்ளார். 
  • இதேபோல் நடிகர் கார்த்தி கடைசியாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் அவரின் 25வது படமாக வெளியாகி படுதோல்வி அடைந்தது. இப்படியான நிலையில் அவர் அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.