நாங்கள் எல்லாம் தலைசிறந்த எழுத்தாளர்களின் புத்தகளை படிக்க விரும்புவோம் என இயக்குநர் மிஷ்கின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மிஷ்கின். முதல் படமே வெற்றிப்படமாகவும், வித்தியாசமான திரைக்கதையாகவும் அமைந்ததில் கவனிக்கத்தக்க நபரானார். தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, யுத்தம் செய், சைக்கோ என குறிப்பிடத்தக்க படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராகி விட்டார். 


அதேசமயம் நடிகராகவும் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். மேலும் பாடகர், பாடலாசிரியர் என்ற பன்முக திறமையும் மிஷ்கினுக்கு உண்டு. இவர் சமீபத்தில் விதார்த் நடித்திருந்த டெவில் படத்துக்கு இசையும் அமைத்திருந்தார். இந்த நிலையில் தான் புத்தகங்கள் படிப்பது பற்றி மிஷ்கின் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். 


அதில், “நான் புத்தகம் படித்து அதில் இருக்கும் விஷயங்களை எல்லாம் படத்தில் வைக்க மாட்டேன். அதில் என்னை எது ஈர்த்ததோ அதை வைத்து புதிதாக ஒன்று படைப்பேன். நாங்கள் எல்லாம் தலைசிறந்த எழுத்தாளர்களின் புத்தகளை படிக்க விரும்புவோம். நான் ஒரு மாதத்திற்கு ஒருமுறை வெற்றிமாறனிடம் பேசுவேன். அப்போது வெற்றி என்ன படிக்கிற? என கேட்பேன். அவனும் என்னிடம் ராஜா நீங்க என்ன படிக்கிறீங்க என கேட்பான்.


இயக்குநர் ராம் 3 மாதங்களுக்கு ஒருமுறை அலுவலகத்துக்கு வருவான். இங்கு இருக்கும் புத்தகங்களில் ஐந்தை எடுத்துச் செல்வான். புத்தகங்களை எடுத்து அடுக்கி விட்டு, கேட்காமலேயே எடுத்து சென்று விடுவான். அண்ணன்கிட்ட கேட்டு எடுக்கிறதே அசிங்கம்ன்னு அதை சொல்ல மாட்டான். அப்புறம் 2 மாசம் கழிச்சி படிச்சி முடிச்சிட்டு புத்தகம் திரும்பி வரும். அதனால் நாங்கள் எப்போதுமே சிறந்த புத்தகம் பற்றி படிப்போம்.


இதேபோல் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா பெரிதாக படிக்காமல் கொஞ்சமாக படிப்பான். என்னைப் பார்க்க வந்தால் முதலில் ‘நீங்க என்ன படிச்சிங்க, அதைப்பற்றி சொல்லுங்க’ என்று தான் ஆரம்பிப்பான். பா.ரஞ்சித்தும் நல்லா புத்தகம் படிப்பான். சினிமா எடுக்கும் நேரங்கள் தவிர்த்து அவனுடைய அறப்போறாட்டங்களுக்கு எல்லாம் உந்து சக்தியே படிக்கிறது தான். எல்லா நேரமும் என்னை சந்திக்கும்போது என்ன புதிதாக படித்தான் என்பது பற்றி தான் பேசுவான். அவருடன் தமிழ் பிரபா என்று ஒருவன் இருப்பான். அவன் ஒரு இலக்கியவாதி என்பதால் எப்போதும் படிச்சிட்டே இருப்பான்.  


எங்களுக்கு படிக்கிறதும், படிப்பாளிகளுடன் பயணப்படுவது தான் வேலையே என மிஷ்கின் அந்த நேர்காணலில் தெரிவித்திருப்பார். 




மேலும் படிக்க: Scams scenes: என்னை ஏமாற்றிய தமிழ் சினிமா.. ஆதாரத்துடன் பகிர்ந்த ரசிகர்கள்.. என்ன நடந்தது?