மாசி மாதத்தில் வரக்கூடிய மகம் நட்சத்திர நாளே மாசி மகமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மாசி மகம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று பௌர்ணமி என்பதால் கூடுதல் சிறப்பு. பௌர்ணமி அன்று மாசி மகம் வருவதால் பலரும் விரதம் இருந்து சிறப்பு வழிபாடு செய்வார்கள்.
மாசி மகம்:
இந்நாளில் புண்ணிய நதிகளிலோ அல்லது கடல்களிலோ நீராடுவது முக்கிய அடைவதற்கு மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது தமிழகம் முழுவதும் மட்டுமின்றி தமிழ் இந்துக்கள் அதிகம் வசிக்கும் இடங்களிலும் பிரபலமானது. மேலும் இந்நாளில் வழிபடும் தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் கடல் கரைகள் ஆறுகள் அல்லது குளங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இதனை தெப்போச்சவம் என்றழைக்கப்படும். அங்கு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இதனை காண மங்களகரமான நிகழ்வை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. வீட்டிலேயே விரதம் இருந்து சிவனையும் பார்வதையும் வழிபட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தால் உங்களது 7 ஜென்மம் பாவம் தீரும் என்பது ஐதீகம். அது போல் நீங்கள் சிவன் பார்வதி முருகனைத் தவிர பெருமாளையும் வழிபடலாம்.
கிரிவலம்:
அதேபோல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வரும் நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். இது திருவண்ணாமலை கிரிவலம் அல்லது அருணாச்சல கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்நாளில் கிரிவலம் செல்வது வழக்கம். இந்நிலையில் பக்தர்கள் திருவண்ணாமலை கோயிலுக்கு சிரமமின்றி செல்ல சிறப்பு ரயில்கள் தென்னக ரயில்வே துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண 06130 ) காலை 11 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கத்தில் பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் திருவண்ணாமலை-விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06129) விழுப்புரத்திற்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும். இந்த ரெயில்கள் தண்டரை, அண்டம்பள்ளம், ஆதிச்சனூர், திருக்கோவிலூர், ஆயந்தூர், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்றுசெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.