தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ள மிஷ்கின் நிகழ்ச்சி ஒன்றில் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
திரைமொழி வழியே அன்பை ஆயுதமாக்கி அறத்தை சொல்லும் இயக்குநர்களில் மிக முக்கியமானவர் மிஷ்கின். சண்முகராஜா என்ற இயற்பெயரை ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கியின் தி இடியட் நாவலின் கதாநாயகனான இளவரசர் மிஷ்கினின் கேரக்டரால் ஈர்க்கப்பட்டு அந்த பெயரை தனதாக்கிக் கொண்டு உதவி இயக்குநராக பணியாற்றி 2006 ஆம் ஆண்டு நரேன், பாவனா நடிப்பில் வெளியான சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என அவரின் படங்களில் அன்பு ஒன்று பிரதானமாக இருந்துள்ளதால் அவர் தனித்துவமாக தெரிகிறார். நடிகராக சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், சுட்டுப்பிடிக்க உத்தரவு, பேச்சுலர் ஆகிய படங்களில் நடித்துள்ள மிஷ்கின் தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் பாடகராக அஞ்சாதே, திண்டுக்கல் சாரதி, யுத்தம் செய், முகமூடி, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார். இதில் சில படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார்.
தற்போது 2014 ஆம் ஆண்டு இயக்குநர் பாலா தயாரிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பிசாசு படத்தின் 2 ஆம் பாகத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆண்ட்ரியா முன்னணி கேரக்டரில் நடிக்க, அவரோடு ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா சந்தோஷ் பிரதாப், அஜ்மல் அமீர் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
மேலும் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் பிசாசு 2 படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பிசாசு படத்தின் ரிலீஸ் தேதி 2 முறை தள்ளிப் போகியுள்ளதால் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் மிஷ்கின் பாடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. இளையராஜாவின் தீவிர ரசிகரான மிஷ்கின், 1985 ஆம் ஆண்டு முரளி, நளினி நடிப்பில் வெளியான கீதாஞ்சலி படத்தில் இடம் பெற்ற இளையராஜா பாடிய துள்ளி எழுந்தது பாட்டை பாடியுள்ளார்.