படத்தை விமர்சிப்பவர்களை பற்றி தான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார். 


இயக்குநர் மிஷ்கின் தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் படத்தை விமர்சிப்பவர்கள் ‘தற்குறிகள்’ என கூறியதாக  சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 


அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு: 


 “என் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டதைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன், தலைப்பு சுவையாக இருக்க வேண்டுமென நான் சொன்னதை வேறு மாதிரி புரிந்து கொண்டு செய்தி போட்டிருக்கிறார்கள், நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. 




என் படத்தைப் பாருங்கள் படம் நன்றாக இருந்தால் பாராட்டுங்கள், படம் நன்றாக இல்லையெனில் கடுமையாக விமர்சியுங்கள், இப்போதல்ல என் முதல் படத்திலிருந்தே இதைச் சொல்கிறேன் விமர்சிப்பது அனைவரின் உரிமை,உரிமை மீறலை நான் என்றும் அனுமதிக்க மாட்டேன்.”  என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். 


மிஷ்கின் பின்னணி


தமிழ் சினிமாவில் 2006ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமாகி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் மிஷ்கின். திரைத்துறையில் எதிர்பாராதவிதமாக நுழைந்து இயக்குநர் வின்செண்ட் செல்வா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மிஷ்கின், தனது முதல் படமான ’சித்திரம் பேசுதடி’ படத்திலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்தார்.


தொடர்ந்து அவரது பிளாக்பஸ்டர் படமான ’அஞ்சாதே’, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் என தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் இயக்குநர்களில் ஒருவரானார். தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டுமின்றி திரைக்கதை எழுத்தாளர், நடிகர், பாடகர் என மிஷ்கின் பல அவதாரங்களையும் ஏற்கெனெவே எடுத்துள்ளார்.


 






இசையமைப்பாளர் இளையராஜாவின் பெரும் ரசிகரான மிஷ்கின்,  தன்னுடைய இசை ஆர்வத்தால் துப்பறிவாளன் படத்தில் இடம்பெற்ற ’ஓடாதே ஓடாதே’, சவரக்கத்தி படத்தில் இடம்பெற்ற தங்கக்கத்தி, கண்ணதாசன் காரைக்குடி உள்ளிட்ட சில பாடல்களைப் பாடியுள்ளார். தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் ’பிசாசு 2’ படத்தை இயக்கி முடித்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறார் மிஷ்கின்.கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப்படமானது வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக இந்தப்படத்தில் இருந்து, டீசர், மேக்கிங் வீடியோ மற்றும்  ‘உச்சந்தலை ரேகையிலே’ பாடல் வெளியான நிலையில், நாளை  ‘நெஞ்சே கேளு’ பாடல் வெளியாக உள்ளது.