கேங்டாக் சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படம் 3 விருதுகளை வென்றுள்ளது.
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய்சேதுபதி இணைந்த படம் 'மாமனிதன்'. பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரித்த இந்தப்படம் இந்தப்படத்திற்கு அவரும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து இருந்தனர்.
ஆனால் சீனு ராமசாமிக்கும் இளையராஜாவுக்கும் இடையே பிரச்னை நடந்த நிலையில், அதன் காரணமாக நீண்ட நாட்களாக இந்தப்படம் வெளியாகமலேயே இருந்தது. அதன் பின்னர் பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் மாமனிதன் படத்தை வாங்கி வெளியிட்டார். ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், ஷங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் சீனுராமசாமியை அழைத்து பாராட்டினார். ஆஹா ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட மாமனிதன் படம் டோக்கியோ பட விருதுகள் விழாவில், சிறந்த ஆசியப்பட பிரிவில் கோல்டன் விருதை வென்றது.
அதனைத்தொடர்ந்து தாகூர் இன்டர்நேஷனல் பட விழாவில் மாமனிதன் திரைப்படம் சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த சாதனைக்கான விருது, விமர்சகர்கள் தேர்வு விருது என 3 பிரிவுகளில் விருதுகளை தட்டிச்சென்றது.
இந்த நிலையில் சிக்கிமில் நடைபெற்ற கேங்டாக் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த கதையம்சம் என 3 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.