விஜய்யை வைத்து தான் ஏன் படம் இயக்காமல் இருந்தேன் என்பதை  இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய மிஷ்கின், நடிகர் விஜய் பற்றி பல விஷயங்களை கூறினார். அப்போது, “விஜய்க்கு தான் சித்திரம் பேசுதடி கதையை எழுதியிருந்தேன். அந்த படம் ஹிட்டான பிறகு படம் பார்த்த விஜய் என்னிடம் வந்து, ‘இந்த மாதிரி படம் எனக்கு சொல்லுங்கண்ணே’ என சொன்னார். நான், விஜய் உங்களுக்கு தான் இந்த கதையை எழுதினேன் என கூறினேன். ஏன் சட்டையை பிடிச்சி சொல்லிருக்கலாம்ல, ஏன் சொல்லல என கேட்டார்.நான் அதற்கு, ‘இல்லப்பா நீ என் கதையை மாத்தியிருப்ப. உங்க அப்பா மாற்றியிருப்பார். நான் வந்து மிஷ்கினாக இருந்திருக்க மாட்டேன். நீ ஒரு சிறந்த மனிதன் தான். ஆனால் எனக்கு என்னுடைய வழியில் வளர்ச்சி என்பது தேவை. என்னால் உன்னுடன் வேலை பார்க்க முடியாது” என சொல்லியதாக மிஷ்கின் அந்த நேர்காணலில் தெரிவித்திருப்பார். 


மேலும் நடிகர் விஜய்யை ஆரம்பத்தில் இருந்து பார்த்ததால் தான் லெஜண்ட் என சொன்னேன். நீங்கள் அந்த வார்த்தையை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தமிழ்நாட்டில் எத்தனையோ கோடி பேர் விஜய்யை ரசிக்கிறார்கள். நேசிக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது லெஜண்ட் மாதிரி தெரியவில்லையா? . அவர் மிகப்பெரிய நடிகர் கிடையாது. ஆனால் கடுமையான உழைப்பாளி. ஒரு ஹீரோவாக நடிச்சிட்டே இருக்கார். அப்ப ஏதோ ஒரு வகையில் அந்த தம்பி லெஜண்ட் தானே.  நான் 25 வருடங்களாக படம் பண்ணுகிறேன். எனக்கு தெரிஞ்சி ஒழுக்கமான ஒரு நடிகராக வேறு யாரையும் பார்த்தது இல்லை. 


சித்திரம் பேசுதடி படம் 


கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநராக மிஷ்கின் அறிமுகமான படம் சித்திரம் பேசுதடி. நரேன், பாவனா ஆகியோரும் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினர். சுந்தர் சி.பாபு இசையமைத்த இப்படம் திரைக்கதைக்காக மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது. அதுமட்டுமல்லாமல் நடிகை மாளவிகா ஆடிய “வாலமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்” பாடலும் மிகப்பெரிய அளவில் பிரபலமாக சித்திரம் பேசுதடி 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. 


இதன்பின்னர் அஞ்சாதே, நந்தலாலா, முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ என வித்தியாசமான படங்களை இயக்கியுள்ளார் மிஷ்கின். மேலும் நடிகராகவும் அறிமுகமாகி மாவீரன், லியோ உள்ளிட்ட படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Rajinikanth: சங்கி கெட்ட வார்த்தைன்னு என் மகள் சொல்லல.. ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக ரஜினி!