தளபதி படத்தின் போது நடைபெற்ற மறக்க முடியாத சம்பவம் ஒன்றை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் முரளி அப்பாஸ் கூறியுள்ளார். 


1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா, பானுப்பிரியா, கீதா, ஸ்ரீவித்யா, ஜெய்சங்கர் என பலரும் நடித்த படம் “தளபதி”. இளையராஜா இசையமைத்த இப்படம் ரஜினியின் கிளாஸிக் படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் போது நடந்த சம்பவங்களை இயக்குநர் முரளி அப்பாஸ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


அதில், “அஞ்சலி என்ற படத்தை மணிரத்னம் இயக்கினார். அப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் ரஜினி பேசினார். ஒரு 2 வயசு குழந்தையை நடிக்க வச்சிருக்கீங்களே, என்னை வச்சு படம் இயக்குங்க என கேட்டார். அவரே வந்து கேட்டபோது ஆசைக்கு பண்ண படம் தான் தளபதி. அப்போ ரஜினி மிகப்பெரிய அளவில் பிஸியாக இருந்தால் பகல் பொழுதில் மட்டுமே ஷுட்டிங்  எடுத்தோம். 


மைசூர் கே.ஆர். சர்க்கிளில் தளபதி படத்தின் சண்டைக் காட்சி ஒன்றை எடுத்தோம். ரஜினி இன்ஸ்பெக்டர் கையை வெட்டும் காட்சியாக படத்தில் வரும். சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கஷ்டப்பட்டு கூட்டத்தை ஒதுக்கி அதன் நடுவில் ஷூட் பண்ணிக் கொண்டிருந்தோம். அங்கு நான், ரஜினி, மணிரத்னம் ஆகியோர் நின்று கொண்டிருந்தோம். சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் சண்டை பயிற்சியை உருவாக்கிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு சாலையில் நடுவில் இருக்கும் மண்டபம் ஒன்றை காட்டிய ரஜினி மணிரத்னத்திடம் “நான் இங்கே தூங்கியிருக்கிறேன்” என சொன்னார். மணிரத்னம்,  ‘இங்க எப்படி நீ தூங்குன?’ என கேட்டார். நான் கண்டக்டராக பணிபுரியும்போது பெங்களூருவில் இங்கு வந்து விட்டு இந்த மண்டபத்தின் படிக்கட்டுகளில் தான் தூங்குவேன் என சொன்னார். ரஜினி போன பிறகு மணி என்னிடம் கேட்டார். நான் அவர் இங்க படுத்திருப்பார் என சொல்வது உண்மை தான். காலையில இங்க தான் இருந்தார். நாங்க தான் எழுப்பி விட்டோம் என சொன்னேன். 


அன்னைக்கு சாயங்காலம் பேப்பரில் ரஜினி பட ஷூட்டிங், போக்குவரத்து நெருக்கடி என நியூஸ் வந்தது. அந்த மண்டப படிக்கட்டுகளில் தூங்கியவருக்கு தான் இந்த இடத்துக்கு வருவேன் என தெரிந்திருக்காது. இந்த இடத்துக்கு வந்த பிறகு தான் இருந்த இடத்தை பார்த்தவருக்கு அன்றைக்கு எப்படி இருந்திருக்கும்? என நினைக்கையில் பிரமிப்பாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.