தான் இயக்கிய திரௌபதி 2 படத்துக்கு போலியான விமர்சனம் கொடுத்தவர்கள் என இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளார்.
திரௌபதி 2 படம் விமர்சனம்
நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரூ.12 கோடி செலவில் இயக்குநர் மோகன் ஜி இயக்கியுள்ள படம் “திரௌபதி 2”. இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, நட்டி, ரக்ஷனா இந்துசூடன், வேல ராமமூர்த்தி, நாடோடிகள் பரணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படம் பெரும் இடையூறுகளுக்கிடையே கடந்த ஜனவரி 23ம் தேதி வெளியானது. முன்னதாக இந்த படம் 2026ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் ஜனவரி 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
டென்ஷனான மோகன் ஜி
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பல படங்கள் ரிலீஸ் தேதியை நிர்ணயிக்க முடியாமல் திணறி வருகிறது. இப்படியான நிலையில் 2026ன் பெரிய படமாக கூறப்படும் விஜய்யின் ஜனநாயகன் எப்போது வெளியாகும் என தெரியாததால் சின்ன பட்ஜெட் படங்கள் விழிபிதுங்கியுள்ளது. இதனிடையே திரௌபதி 2 படம் வெளியான அதே நாளில் நடிகர் அஜித் நடித்த அவரது 50வது படமான மங்காத்தா ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதனால் அஜித் படத்துக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
எனினும் ரசிகர்கள் மீதான நம்பிக்கையில் மோகன் ஜி அதனை கண்டுக் கொள்ளாமல் திரௌபதி 2 படத்தை வெளியிட்டிருந்தார். இந்த படம் ரிலீசான முதல் காட்சியில் இருந்தே மிகப்பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. தியேட்டர்களுக்கு கூட்டம் வராமல் இருந்தது, காட்சிகள் ரத்து செய்யப்பட்டது என பல விஷயங்கள் நடந்தது. இதனால் டென்ஷனான மோகன் ஜி தனது வருத்தத்தை பதிவு செய்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பலர் திரௌபதி 2 படம் நன்றாக இருப்பதாக கூறி வருகின்றனர். மோகன் ஜியும் தியேட்டர்களுக்கு சென்று வீடியோ வெளியிட்டு வருகிறார்.
போட்டோவுடன் வெளியான குற்றச்சாட்டு
இந்த நிலையில் அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதில், யூட்யூப் சேனல்களில் திரௌபதி படத்துக்கு விமர்சனம் சொன்ன சிலரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. அதில், “இது சரியா??? முதல் நாள் முதல் காட்சியிலேயே எல்லா யூடியூப் சேனல்களிலும் போலியான மற்றும் விஷமத்தனமான விமர்சனங்களைப் பரப்பி, எதிர்மறையான கதையை உருவாக்குகிறார்கள்.. இந்த முகங்களால்தான் எல்லா கடின உழைப்பும் வீணானது” என குறிப்பிட்டுள்ளார்
இதனைக் கண்ட சில ரசிகர்கள் இப்படியான விஷமத்தனமான விமர்சனம் செய்பவர்களில் சிலர் அந்த படத்தைப் பார்த்திருக்கவே மாட்டார்கள் என கூறி வருகின்றனர்.
