மயிலாடுதுறை: சாலை பாதுகாப்பு என்பது வெறும் சட்டமல்ல, அது ஒவ்வொரு தனிமனிதனின் உயிர் காக்கும் கவசம் என்பதை வலியுறுத்தி, மயிலாடுதுறையில் நடைபெற்ற ஒரு வினோத விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

Continues below advertisement

வித்தியாசமான முயற்சி

மயிலாடுதுறை மாவட்டத்தின் மையப்பகுதியான கால்டாக்ஸ் பகுதியில் அமைந்துள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இன்று காலை ஒரு நெகிழ்ச்சியான மற்றும் ஆச்சரியமான நிகழ்வு அரங்கேறியது. மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி கிளப் சார்பில், இருசக்கர வாகன ஓட்டிகளிடையே தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஒரு புதுமையான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

வழக்கமாக சாலைகளில் ஹெல்மெட் அணியாதவர்களைப் பிடித்து அபராதம் விதிக்கும் காவல்துறையினரைப் பார்த்து பழகிய மக்களுக்கு மத்தியில், ஹெல்மெட் அணிந்து வந்தவர்களைப் பாராட்டி அவர்களுக்குப் பரிசாக இலவச பெட்ரோல் வழங்கும் இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

Continues below advertisement

ஆசியுடன் பெட்ரோல் வழங்கிய விநாயகர்

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, புராணக் கடவுளான விநாயகர் வேடமணிந்த நாடகக் கலைஞர் ஒருவர் கலந்துகொண்டார். பெட்ரோல் பங்கிற்கு ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை இன்முகத்தோடு வரவேற்ற 'விநாயகர்', அவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

விநாயகர் பெருமானின் வாகனமான 'மூஞ்சூறு' போல, இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் வாகனங்களும் அவர்களுக்குப் புனிதமானவை என்றும், அந்த வாகனத்தில் பயணிக்கும்போது உயிரைக் காக்க ஹெல்மெட் அவசியம் என்றும் அவர் நகைச்சுவையுடன் விளக்கினார். பின்னர், ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு ரூபாய் 50 மதிப்புள்ள பெட்ரோல் இலவசமாக வழங்குவதற்கான டோக்கன்களை அவர் வழங்கினார். சிலருக்கு நேரடியாக அவரே பெட்ரோல் டேங்கில் எரிபொருளை நிரப்பினார். 

குவிந்த வாகன ஓட்டிகள்: நீண்ட வரிசையில் காத்திருப்பு

"ஹெல்மெட் அணிந்தால் 50 ரூபாய் பெட்ரோல் இலவசம்" என்ற செய்தி காட்டுத்தீயாக நகரம் முழுவதும் பரவியது. இதைக் கேள்விப்பட்டவுடன், வழக்கமாக ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபர்கள் கூட, தங்கள் வீடுகளில் இருந்த பழைய ஹெல்மெட்களைத் தேடி எடுத்து அணிந்துகொண்டு பெட்ரோல் பங்கிற்கு படையெடுத்தனர்.

சிறிது நேரத்திலேயே கால்டாக்ஸ் பகுதியில் ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளின் நீண்ட வரிசை காணப்பட்டது. "பெட்ரோல் விலை ஏறி வரும் சூழலில், பாதுகாப்புடன் கூடிய இந்தச் சிறு உதவி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என வரிசையில் நின்ற வாகன ஓட்டி ஒருவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சுமார் 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் நோக்கம்

இந்த விழிப்புணர்வு முகாம் குறித்து கிங்ஸ் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கூறுகையில்; "சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் தலைக்கவசம் அணியாத காரணத்தினாலேயே மூளைச் சாவினைச் சந்திக்கின்றனர். சட்டத்திற்காக ஹெல்மெட் அணியாமல், தங்கள் குடும்பத்தின் நலனுக்காக அணிய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். விநாயகர் வேடமிட்டு வழங்குவதன் மூலம், மக்களிடையே ஒரு ஆன்மீக ரீதியான பிணைப்பும், விழிப்புணர்வும் ஏற்படும் என்று நம்பினோம். எங்களின் இந்தச் சிறு முயற்சி ஒரு உயிரையாவது காப்பாற்றினால் அதுவே எங்களுக்குக் கிடைத்த வெற்றி," என்றனர்.

பொதுமக்களின் வரவேற்பு

மயிலாடுதுறை நகர மக்கள் இந்த முயற்சியைப் பாராட்டி வருகின்றனர். அபராதம் விதிப்பதைக் காட்டிலும், இது போன்ற ஊக்கத்தொகை அல்லது பரிசுகள் வழங்குவது மக்களிடையே நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.