சினிமாவில் படம் பண்ண வருகிறவர்களை தடுக்கும் வேலையும் நடந்துக் கொண்டிருக்கிறது என இயக்குநர் மோகன் ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய திரௌபதி படம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ஜி அடுத்தப்படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே அடுத்ததாக தான் ஏற்கனவே இயக்கிய திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களின் 2 ஆம் பாகம் எடுக்கலாமா என்ற கேள்வியை சமூக வலைத்தளங்களில் எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் இன்று அதுதொடர்பான வீடியோ ஒன்றை மோகன் ஜி வெளியிட்டார். அதில், “நேற்று சமூக வலைத்தளங்களில் திரௌபதி அல்லது ருத்ர தாண்டவம் படத்தின் 2ஆம் பாகம் பண்ணலாமா? என்ற ரீதியில் ஒரு பதிவு வெளியிட்டேன். சில பேரு புதுசா ஏதாவது படம் பண்ணுங்கன்னு சொன்னாங்க. சில பேரு கதை இல்லைன்னா நாங்க தர்றோம்ன்னு சொன்னாங்க. ட்விட்டர் பக்கம் போனால் அங்க ஒரே கதறலாக இருந்தது. ரொம்ப நன்றி.
திரௌபதிக்கும் ருத்ர தாண்டவத்துக்கும் நம்பிக்கை வைத்திருக்கும் அத்தனை பேருக்கும் நன்றி. கிட்டதட்ட பகாசூரன் ரிலீசாகி ஒரு வருடம் மேலாகி விட்டது. ஆனால் அடுத்தப் படம் இன்னும் பண்ணாமல் இருக்க காரணம், இரண்டு பெரிய கதையில் உருவாக்கி வருவது தான். ஒன்று அரியலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையை சுற்றி நிறைய கிராமங்கள் பாதிக்கப்பட்டு இருக்கு. 250 முதல் 300 கிராமங்களில் கொடிய விஷம் மெல்ல மெல்ல பரவி வருகிறது. அதில் ஒரு பெரிய ஹீரோ நடிக்க வேண்டியிருப்பதால் அந்த படம் தாமதமாகி உள்ளது.
இன்னொரு படம் நான் வசிக்கும் காசிமேடு சம்பந்தப்பட்டது. கடலுக்கடியில் சில 100 ஆண்டுகள் முன்பு காசி விஸ்வநாதர் கோயில் மூழ்கியதாக ஒரு தகவல் உண்டு. அதுதொடர்பாக ஆராய்ச்சி செய்து அதில் பாதி படம் தண்ணீருக்கு அடியில் நடக்கும். அதில் கேங்ஸ்டர் கதையை சேர்த்து மிகப்பெரிய பட்ஜெட் என்பதால் அதுவும் பிளானில் உள்ளது. அதேமாதிரி ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி பண்ண கதை உள்ளது. மீனவனின் வளர்ச்சி என்ற பெயரில் உலக அளவில் மிகப்பெரிய மீன் சந்தையில் தலைவனாக வலம் வருகிறார் என்ற கேங்ஸ்டர் அடிப்படையிலான கதையும், இன்னொரு கதையும் இருக்கிறது.
இந்த 4 கதையையும் கையில் வைத்துக் கொண்டு இந்த ஒரு வருடமாக பல ஹீரோக்களிடம் பேசி ஓகே பண்ணியிருக்கோம். பிரச்சினை என்னவென்றால் தயாரிப்பு தரப்பில் தான் இருக்கிறது. ஏனென்றால் ஓடிடி தளம் மூடப்பட்டதால் முன்னணி நடிகர்கள் தவிர மற்ற யாருக்கும் பணம் கிடைப்பதில்லை. பெரிய பட்ஜெட் படம் பண்ண வேண்டும் என்றால் பணம் தேவைப்படுகிறது. அதனால் தான் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு பின் பண்ணலாம் என சொல்லியிருக்கிறார்கள்.
அதனால் தான் மற்றவர்களை போல நாமும் நம்முடைய படங்களில் இருந்து 2 ஆம் பாகம் பண்ணலாம் என நினைத்தேன். அதனால் அந்த பதிவு போட்டேன். இன்றைக்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் பிரச்சினையாக உருவாகியுள்ள போதைப்பொருள் பற்றி நிறைய ஆய்வு பண்ணி வைத்துள்ளேன். சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. திரௌபதி படம் பண்ணியதில் இருந்தே எப்போது மீண்டும் அப்படி ஒரு படம் பண்ணப்போகிறோம் என்ற கேள்வி எழுந்துக் கொண்டே இருந்தது.
திரௌபதி 2 படம் பண்ண காரணங்கள் நிறைய இருக்கு. நல்ல ரெஸ்பான்ஸ் வந்தது. எதிர்ப்பை எல்லாம் மீறி சினிமாவில் படம் பண்ணிக்கொண்டு இருக்கிறோம். படம் பண்ண வருகிறவர்களை தடுக்கும் வேலையும் நடந்துக் கொண்டிருக்கிறது. காலம் மாறும், காட்சிகள் மாறும். மே முதல் வாரத்துக்குள் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன்” என மோகன் ஜி தெரிவித்துள்ளார்.