Smoke Biscuit என்ற திண்பண்டத்தை தமிழக அரசு உடனடியாக தடைசெய்ய வேண்டும் என இயக்குநர் மோகன் ஜி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அதில், “இது போன்று விற்கும் #SmokeBiscuit என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது #LiquidNitrogen.. ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரச  இதற்கு தடை விதிக்க வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலினின் ஐடியை குறிப்பிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். 






இது உண்மையா என கேட்ட இணையவாசி ஒருவருக்கு மோகன் ஜி அளித்துள்ள பதிலில், “சென்னை தீவு திடலில் இந்த வருடம் நடந்த அரசு பொருட்காட்சியில் இரண்டு கடைகள் இதற்காக ஒதுக்கப்பட்டன.. பல கடற்கரைகளில் விற்பனை செய்கிறார்கள்.. திருமண விழாக்களில் தருகிறார்கள்.. உண்மையே” என குறிப்பிட்டும் உள்ளார். வழக்கம்போல மோகன் ஜி என்ன பேசுவதென்று தெரியாமல் உளறுவதாக சிலர் விமர்சிக்க தொடங்கினர். 


அதில் ஒரு பதிவுக்கு பதிலடி கொடுத்த மோகன் ஜி, “இறைவா.. இந்த மாதிரி பைத்தியங்கள என் கிட்டயே மாட்டி விடுறியே.. Liquid nitrogen பருகினால் உடல் உறுப்புகள், செல்கள் இறுகும்.. சுவாச பிரச்சனை உருவாகும்.. நிமோனியா காய்ச்சல் உருவாகும்.. எதாவது உளறாதீங்கடா பூண்டுகளா” என தன் பாணியில் பதில் சொல்லியுள்ளார். இதனிடையே மோகன் ஜி சொன்ன Smoke Biscuit விஷயம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. பலரும் தமிழ்நாடு அரசை சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு உடனடியாக நடவடிக்கை அல்லது விளக்கமளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். 


மோகன் ஜி திரைப்பயணம் 


பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன் ஜி, திரௌபதி, ருத்ர தாண்டவன், பகாசூரன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தனது அடுத்த படம் தேர்தல் முடிந்த பிறகு வெளியாகும் என தெரிவித்த மோகன் ஜி அதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.