நடிகர் விஷால் புதிதாக ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியுள்ள நிலையில் அதில் புதிதாக ஒன்றை முயற்சி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அர்ஜூனிடம் உதவி இயக்குநராக இருந்து செல்லமே படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷால். தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகனான இவர், தற்போது முன்னணி நடிகராக உள்ளார். நடிகர், பாடகர்,தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வரும் விஷால், துப்பறிவாளன் 2 படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இதனிடையே நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருக்கும் அவர், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அரசியல் கட்சி தொடங்கி போட்டியிடப்போவதாக அறிவித்தும் உள்ளார்.
இப்படியான நிலையில் அவர் தற்போது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வேடிக்கையான எல்லாவற்றையும் வெளியே கொண்டு வரும், மறைந்திருக்கும் திறமைகளை வேட்டையாட வேண்டிய நேரம் இது. அது ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் வீடியோவாக இருக்கலாம். ஒரு இனிமையான தருணத்தில் பலவிதமான பதிவுகள் மற்றும் பல விஷயங்களின் வெவ்வேறு கண்ணோட்டங்களைப் பார்த்தது ஆச்சரியமாக இருந்தது.
நீங்கள் அனைவரும் பிரகாசிக்கவும், உங்களின் வேடிக்கையான பக்கங்களை உலகுக்குக் காட்டவும் ஒரு தளத்தைத் தொடங்கியுள்ளேன். நம்முடைய வாழ்க்கை அழுத்தங்களை போக்கக்கூடிய சில ரீல்ஸ் வீடியோக்ளை காட்ட விரும்புகிறேன். இதனை பெறுவதில் எந்த சிரமும் இல்லை. அதனால் உங்கள் நகைச்சுவைத் திறமைகளை பிரத்யேகமாக பயன்படுத்த @vishal_fanfactory என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
ரீலிசுக்கு ரெடியாக உள்ள “ரத்னம்”
தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குநர் ஹரியுடன் 3வது முறையாக இணைந்துள்ள படம் “ரத்னம்”. இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், யோகிபாபு, சமுத்திரகனி என பலரும் நடித்திருக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள ரத்னம் படம் ஏப்ரல் 26 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.