முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து சமகால அரசியல் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். 


அதில் அவர் பேசியதாவது, ”சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார். மேற்கொண்டு பேசிய அவர்,


“அரசுக்கு வருவாய் வரக்கூடிய வழிமுறைகளை விட்டுவிட்டு ஆதி திராவிடர் மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மாற்றி கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம். இதனால்தான் 15 நாட்களில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க தேசிய எஸ்.சி., எஸ்.டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆதிதிராவிடர் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்பது அவர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படவேண்டும். அதே வகையில் இன்றைக்கு திமுக அரசு, மகளிர் உரிமைத் தொகைக்கு பணம் தேவை என்பதால், ஒரு காவல் நிலையத்துக்கும் மக்களிடம் மாதம் 25 லட்சம் அபராதம் என்ற பெயரில் வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என பத்திரிகைச் செய்தி வந்துள்ளது. காவலர்கள் குற்றவாளிகளை கண்டுபிடித்து குற்றத்தை தடுக்கும் பணியில் கவனம் செலுத்த முடியாமல், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களிடத்தில் அபராதம் வசூல் செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் பொது மக்களுக்கு பெரும் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. 


புத்தி தேவையா?


மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் பொருளாதார வல்லுநர் குழு அமைப்போம் என்றார். அந்த குழுவால் அரசுக்கு வருவாயை அதிகரிக்க ஆலோசனை கூறினார்களா? என்றால், அப்படி ஆலோசனை கூறவில்லையே. அப்படி ஆலோசனை கூறியிருந்தால், பால் விலை, சொத்து வரியை அதிகரிக்கவேண்டிய அவசியம் இல்லை. மேலும், வாகனத்திற்கான வரியை ஏற்றவேண்டிய அவசியம் இல்லை. கண்மூடித்தனமாக வரி ஏற்றப்பட்டுள்ளது. வரியை ஏற்றி விட்டு வல்லமை பெற்ற அரசு என்கிறார். இதனை யார் வேண்டுமானாலும் செய்யலாம், இதற்கு புத்தியா தேவை? புத்தி கெட்டவன்தான் செய்வான். மக்களின் நிலையை அறிந்து செயல்படவேண்டும். வரி போடுவதும் தெரியக்கூடாது, வசூலிப்பதும் தெரியக்கூடாது. இந்த ஆட்சியில் அனைத்திற்கும் வரிதான். இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 




ஃபோட்டோஷூட் முதலமைச்சர்


”அதிமுக ஒருபோதும் ஊழலை சுட்டிக்காட்ட தவறியதில்லை. அதனை அதிமுக எப்போதும் செய்யும் அண்ணாமலை இப்போது திமுகவின் ஊழலை சுட்டிக்காட்டுகிறார். தக்காளி விலை தங்கத்தின் விலைக்கு நிகராக உயர்ந்துள்ளது. தக்காளி மட்டுமல்ல இஞ்சி, பூண்டு உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரித்துவிட்டது.  இதுகுறித்து  கூறுவதை முதலமைச்சரின் காதுகள் கேட்காது. மாறாக வீர தீர சூர வசனங்கள் பேசிக்கொண்டு, ஃபோட்டோ ஷூட் நடத்திகொண்டு இருப்பவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின்” என அந்த செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.