இயக்குநர் மோகன் ஜி தனது அடுத்தப்படத்தில் ஹீரோவாக யார் நடிக்கப் போகிறார் என்ற அறிவிப்பை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 


சர்ச்சையை கிளப்பிய பகாசூரன்


இயக்குநர் மோகன் ஜி நடிகர்கள் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி ஆகியோரை முதன்மை கேரக்டர்களாக கொண்டு “பகாசூரன்” படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. பகாசூரனில் ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், ராம்ஸ், சரவணன் சுப்பையா, தேவதர்ஷினி ஆகியோரும் நடித்த நிலையில், சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். 


ஒருபக்கம் படம் வெற்றி என படக்குழு அறிவித்தாலும், மறுபக்கம் வழக்கம்போல பகாசூரன் குறித்து சர்ச்சைகளும் எழுந்தது.குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு குறித்து மிகவும் பிற்போக்கு தனமாக அவர் வசனங்கள் வைத்ததாக சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனம் எழுந்தது. ஆனால் மோகன் ஜி பகாசூரன் பெண் குழந்தைகளுக்கான,  பெற்றோருக்கான சிறந்த படம். படத்தை அனைவரும் காண வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 


இதற்கிடையில் பகாசூரன் படம் வெற்றி பெற்றதால் அப்படத்தின் தயாரிப்பாளர் கௌதம், இயக்குனர் மோகன் ஜிக்கு தங்க மோதிரம் மற்றும் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கினார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இந்த விழாவில் நடிகர் ரிச்சர்ட் ரிஷியும் பங்கேற்றிருந்தார். 


மோகன் ஜி’யின் அடுத்தப்படம் 


இந்நிலையில் மோகன் ஜி தனது அடுத்தப்படத்தின் ஹீரோ யார் என்பதை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். அவரது பதிவில், காசி கங்கா ஆர்த்தியின் நிகழ்வின்போது  நடிகர் ரிச்சர்ட் ரிஷி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், முக்கியமான செய்தி.. என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் தான். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார். 


ஏற்கனவே மோகன் ஜி இயக்கிய பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களில் ரிச்சர்ட் ரிஷி நடித்திருந்தார். அதேசமயம் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் மோகன் ஜி அடுத்ததாக முன்னணி நடிகரை வைத்து படம் எடுப்பார் என தகவல்கள் வெளியான நிலையில், மீண்டும் ரிச்சர்ட் ரிஷியுடன் இணைந்துள்ளது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.