இயக்குநர் மித்ரன் R. ஜவஹர் இயக்கி மார்ச் 3 ஆம் தேதி அரியவன் படம் வெளியாக உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. 


எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிப்பில்,  அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில் வெளியாகியுள்ள படம் “அரியவன்”. கமர்ஷியல் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமப்புத்திரன், மீண்டும் ஒரு காதல் கதை, திருச்சிற்றம்பலம் படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியதாக கூறப்பட்டது.


ஆனால் மித்ரனோ கடந்த வாரம்  நடிகர் மாதவனை வைத்து அடுத்தப்படம் இயக்கப்போவதாக அறிவித்தார். அப்படியிருக்கையில் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் எப்போது அரியவன் படம் இயக்கினார் என்ற கேள்வியும் ரசிகர்களிடத்தில் எழுந்தது. மேலும் இப்படத்துக்கு  ஜேம்ஸ் வசந்தன், வேத் சங்கர்,  கிரி நந்த் ஆகியோர் இசையமைத்துள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்பு, அரியவன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 


இதில் மித்ரன் R. ஜவஹர் இல்லாமலேயே விழா நடந்தது பல கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியது. படம் பற்றிய பேசிய அனைவரும் மறக்காமல் மித்ரனுக்கு நன்றி தெரிவித்தனர். இதனால் ஏதோ வேலையில் பிஸியாக அவர் இருப்பார் போல நினைத்துக் கொண்டனர். இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள மித்ரன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அவர் தனது பேட்டியில், “அரியவன் படத்தை என்னுடன் உதவியாளராக பணியாற்றியவர்  தான் இயக்கியுள்ளார். நான் அந்த படத்தின் கதை டிஸ்கஷன் மற்றும் ஷூட்டிங் என சில நாட்கள் மட்டுமே என்னுடன் இருந்தவர் என உதவி செய்தேன். அவ்வளவுதான் அரியவனுக்கும் எனக்குமான சம்பந்தம். மற்றபடி இந்த படத்திற்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் கிடையாது” என தெரிவித்துள்ளார். 


மேலும், “அரியவன் படத்துக்கு ப்விளம்பரம் பெறுவதற்காகவே எனது பெயரை முன்னிலைப்படுத்த முயற்சிக்கின்றனர். இதை மக்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாதவனுடனான நான் இணையும் அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டேன், அதில் தான் இப்போது என் கவனம் உள்ளது ” எனவும் மித்ரன் ஆர்.ஜவஹர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கோலிவுட் திரையுலகில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.