சென்னை வந்துள்ள இந்திய, இலங்கை மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் ஆளுநரை ராஜ்பவனில் சந்தித்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட்:
சென்னையில் இந்தியா, இலங்கை இடையே நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச டி20 சீரிஸ் கிரிக்கெட் போட்டியில் முதலிரண்டு இடங்களில் வென்ற இலங்கை, இந்திய அணி வீரர்கள் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று (24.02.2023) சந்தித்துப் பேசினர்.
டி-20 சீரீஸில் பங்கேற்க இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியம் மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றின் ஏற்பாட்டின் பேரில் சென்னை வந்த இவர்கள், ராமச்சந்திரா பல்கலைக்கழக கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 23, 24ல் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றனர்.
சோதனையான வாழ்க்கையை மீறி சாதித்துவரும் அவர்களின் வாழ்க்கை நிலை பற்றி கேள்விப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, இரு அணி வீரர்களையும் பார்க்க விரும்பி அவர்களை ராஜ்பவனுக்கு இன்று மாலை அழைத்திருந்தார். ஆளுநர் மாளிகை தர்பார் மண்டபத்தில் இரு அணிகளைச் சேர்ந்த தலா 18 வீரர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார்.
கண்ணீர் கதை:
அப்போது இரு தரப்பு வீரர்களும் தாங்கள் எதிர்கொள்ளும் சவாலான வாழ்க்கை சூழல் குறித்தும் வறுமை நிலையிலும் விளையாட்டு மீதான ஆர்வத்தால் கிரிக்கெட் விளையாட வந்துள்ளதையும் கூறினர்.
ஒரு சில வீரர்கள், தங்களுக்கு அன்றாடம் மூன்று வேலை உணவு கூட கிடைப்பது நிச்சயமில்லாத நிலையில் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர். தற்போது வீட்டுக்குப் போனால் அங்கு சாப்பாடு இருக்குமா என்பது கூட கேள்விக்குறிதான் என்று வேதனையுடன் கூறினர். ஒரு கிரிக்கெட் வீரர் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறோம். இத்தனை ஆண்டுகளில் மாநிலத்தில் ஆளுநராக இருப்பவர் எங்களை அழைத்து மரியாதையாக எங்கள் குறைகளை காது கொடுத்து கேட்பது இதுதான் முதன்முறை என்று குறிப்பிட்டார்.
ரூ. 18 லட்சம் உதவி:
இரு அணி வீரர்களின் பிரச்னைகளை கேட்டறிந்த ஆளுநர், அவர்களின் வாழ்க்கைச் சூழலை எண்ணி உணர்ச்சி வசப்பட்டார். உடனடியாக அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆளுநர் தரப்பு நிதியில் இருந்து முதலிடம் வென்ற இலங்கை அணிக்கு ரூ. 10 லட்சமும், 2-ம் இடத்திற்கு வந்த இந்திய அணிக்கு ரூ. 8 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்க உத்தரவிட்டார்.
ஆளுநரின் அறிவிப்பால் நெகிழ்ச்சியடைந்த இந்திய, இலங்கை வீரர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். நீங்கள் அனைவரும் புதிய உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் செயல்பட்டு, அவரவர் தாய் நாட்டுக்கு பெருமை தேடித்தர வேண்டும் என்று ஆளுநர் ரவி வாழ்த்தினார்.