நடிப்பை பற்றி நடிகர் வி.கே ராமசாமி சொன்ன ஒரு விஷயத்தை கமல் ஒரு நேர்காணலில் நினைவுகூர்ந்திருப்பார். ஒரு காட்சியில் நடிக்கும்போது இந்த இரண்டு கைகளை என்ன செய்ய என்று கமல் கேட்க, அதற்கு அவர் நடிக்கும்போது நமக்கு கைகள் இருக்கின்றன என்பதையே நாம் மறந்துவிட வேண்டும் என்று சொன்னாராம்.


வி.கே.ராமசாமியின் தனித்துவமான நடிப்பே அதுதான் எந்த காட்சியிலும் அவர் தனக்கு கைகள் என்று ஒன்று இருப்பதையே மறந்துவிட்டது போல்தான் நடிப்பார். பார்வையாளர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் அவை ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்கும். இந்த கட்டுரை வி.கே ராமசாமியைப் பற்றியும் இல்லை, கமல்ஹாசனைப் பற்றியும் இல்லை. இவர்கள் இருவருக்கும் தொடர்பே இல்லாத ஃபகத் ஃபாசிலைப் பற்றியது. ஏனென்றால் அவரின் பிறந்தநாள்


கண்களால் மட்டும் பேசுபவரில்லை ஃபகத் ஃபாசில்..


ஃபகத் ஃபாசிலின் கண்கள் இன்று மிகப்பிரபலமானவை. மனுஷன் கண்ணாலயே நடிக்கிறார் என்று அனைவரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் ஃபகத் ஃபாசிலின் உடலை ஒவ்வொரு அங்கமாக கவனமாக பார்த்தோமானால் தெரியும். தனது உடலின் ஒவ்வொரு அசைவிலும் கதாபாத்திரத்திற்கு நம் கண் முன்னால் உயிர் கொடுத்துக் கொண்டிருப்பார் அவர்.


மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரங்கள்




தனித்துவமான குணாம்சங்களை கொண்ட கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் சிலர் நல்ல நடிகர்கள் என்று பாராட்டுக்களை பெறுவார்கள். ஆனால் தனது சினிமா வாழ்க்கையில் ஃபகத் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்கள் மிக சாதாரண மனிதர்களின் கதாபாத்திரங்கள். எந்த வித சிறப்பு குணாம்சமும் இல்லாமல் கூட்டத்தில் இருக்கும் ஒருவரைப்போன்ற கதாபாத்திரங்களில்தான் ஃபகத் ஃபாசில் அதிகமாக நடித்திருக்கிறார். ஆனால் இந்த கதாபாத்திரங்களை  ஒவ்வொரு பார்வையாளரும் தனிப்பட்ட முறையில் தங்களுடன் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ளும் வகையில் அந்த கதாபாத்திரத்தின் முழு உள்ளுண்ர்வையும் வெளிப்படுத்தக் கூடியவர் ஃபகத்.


அதே நேரத்தில் வில்லனாக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் ஃபகத் அந்த கதாபாத்திரத்தை நாம் வெறுக்கும் அளவிற்கு  நடித்தும் காட்டக் கூடியவர்.


கண்கள் காட்டும் ஜாலங்கள்




நடிப்பில் கண்கள் ஒரு நடிகனின் மிகப்பெரிய ஆயுதங்கள். அதற்காக அதை வாள்வீச்சுப் போல் சுழற்றிக் கொண்டே இருக்கக் கூடாது இல்லையா. ஒரு சில காட்சிகளில் எண்ணி எண்ணி இமைப்பதுபோல் சில தருணங்களை தனது கண்களில் நிறுத்தி வைக்கும் அவரது ஆற்றல் அபாரமானது.


கதைதான் முக்கியம் நடிகர் இல்லை


எத்தனையோ அசாத்தியமான விஷயங்களை செய்தாலும் சினிமாவிற்கு வெளியே ஒரு நடிகர், தான் ஏன் இந்த  கலை வடிவத்தை தேர்வு செய்திருக்கிறோம் என்பதில் தெளிவு கொண்டிருப்பது அவசியமாகிறது. அந்த வகையில் எப்போதும் தன்னை முன்நிலைப்படுத்துவதை விட ஒரு படத்தின் கதைக்கே முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவராக ஃபகத் இருக்கிறார்.


எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவரது நடிப்பு அந்த கதையை மேம்படுத்துவதற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். மேலும்  நல்ல படங்களையே மக்கள் கொண்டாடவேண்டுமே தவிர நடிகனை அல்ல என்பதில் அவரது புரிதல் தெளிவானதாக இருக்கிறது.


கைகளை அல்ல தனது மொத்த உடலையும் மறந்து எந்த ஒரு கதாபாத்திரத்துடனும் சங்கமித்துவிடக் கூடியவர் ஃபகத் ஃபாசில்..