விசிக தலைவர் திருமாவளவன் பேச்சில் ஆவேசத்தை விட எப்போதும் ஒரு நிதானம் இருக்கும் என இயக்குர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். 


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விடுதலை கலை இலக்கியப் பேரவை நடத்தும் இளவந்திகை திருவிழாவின் ஒரு பகுதியாக எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு மாமன்னன் படத்துக்காக  எழுச்சித்தமிழர் இலக்கிய விருது வழங்கப்பட்டது. இதனை விசிக தலைவர் தொல் திருமாவளவன் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ், “நான் ரொம்ப உணர்ச்சிகரமான நபர். அதிகமாக பேசினால் எந்த ரூட்டில் செல்வேன் என எனக்கே தெரியாது.  ஒவ்வொரு படம் எடுக்கும்போது, அப்படம் மற்ற இயக்குநர்களுக்கு இருக்குமா என தெரியவில்லை. நான் ஒரு திரைக்கதை எழுதும்போது நான் எந்தெந்த காட்சியில் ஆத்திரப்படுகிறேன், எதில் அந்த உணர்வு அதிகமாக இருக்கிறது, உணர்ச்சிவசப்படுகிறேன் என்பது எழுதும்போது எனக்கே தெரியும். இதை எப்படி படமாக்குவது என்ற கேள்வி எழும். மற்றவர்கள் மனம் போகும் போக்கில் எழுதிய திரைக்கதையை நான் ஒருநாளும் அப்படி எழுதியது கிடையாது. அதை எழுதுவதற்கான சாத்தியக்கூறுகள் தமிழ் சினிமாவிலேயோ, சமூகத்திலேயோ இல்லை. ஏனென்றால், எதிரிகளை மனதில் வைத்து தான் ஒவ்வொரு திரைக்கதையையும் உருவாக்குவோம். 






பரியேறும் பெருமாளில் அப்பா ஓடிவர காட்சி, கர்ணனில் பஸ் உடைக்கும் காட்சி, மாமன்னனில் இடைவேளை காட்சி ஆகியவை எழுதிவிட்டு படமாக்குவதற்கு முந்தைய நாள் இந்த காட்சியை நம்மால் படமாக்க முடியுமா? என்ற கேள்வி எழும். இல்லை இந்த காட்சியை சென்சார் அனுமதிக்குமா?, இதைப் பார்த்து  ரசிகர்கள் என்னை என்ன மாதிரி பார்ப்பார்கள். அந்த நேரத்தில் நான் திருமாவளவனின் வீடியோக்களை தான் பார்ப்பேன். அவரின் பேச்சில் என்னிடம் இருக்கும் கோபத்தை விட அதிக கோபம் இருக்கும். ஆவேசம், பாய்ச்சல் ஆகியவற்றை விட ஒரு நிதானம் அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கு இருக்கும். 


நான் அதைப் பார்த்து நிறைய நாள் ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். ஒன்றரை மணி நேரம் பேசினாலும் நிதானம் தவறாது. அதனை கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.  




மேலும் படிக்க: Mari Selvaraj: வாழ்க்கையின் மிகச்சிறந்த விருது.. திருமாவளவன் செய்த செயலால் நெகிழ்ந்த மாரி செல்வராஜ்