விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் தலைவர் தொல்.திருமாவளவனுடன் தன்னுடைய மறக்க முடியாத தருணத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். 


இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்து பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதனைத் தொடர்ந்து கர்ணன், மாமன்னன்  ஆகிய படங்களை இயக்கி முன்னணி மற்றும் முக்கிய இயக்குநராக உள்ளார். அடுத்தாக வாழை படத்தை இயக்கியுள்ள மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை வைத்து கபடி சம்பந்தப்பட்ட படம் ஒன்றையும் இயக்கவுள்ளார். 


இப்படியான நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விடுதலை கலை இலக்கியப் பேரவை நடத்தும் இளவந்திகை திருவிழாவின் ஒரு பகுதியாக எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் விழா நேற்று நடைபெற்றது. இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாரி செல்வராஜூக்கு எழுச்சித்தமிழர் இலக்கிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 






இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “இதுதான் மாமன்னன் படத்துக்கான முதல் விருது என சொன்னார்கள். ஆனால் அப்படம் ரிலீசான நாள் அன்று முதல் காட்சி முடியும் போதே அதற்கான விருதுகளை மக்கள் கொடுத்து விட்டார்கள். பரியேறும் பெருமாள் படம் ரிலீசாகி மக்களால் கொண்டாடப்பட்டு இருக்கிறது. அப்படத்துக்கான முதல் விருது ஒரு பிரபல ஊடக நிறுவனத்தில் கொடுத்தார்கள். சினிமாவில் என்னுடைய முதல் விருது. ஆனால் அந்நிகழ்ச்சியில் என் குடும்பம், நண்பர்கள் சார்ந்த யாரையும் அழைத்து செல்ல முடியாத அளவுக்கு பரபரப்பாக இருந்தேன். அந்த விருதை எனக்கு இயக்குநர் பாரதிராஜா கொடுத்தார்.


அந்த விருதை பெறும்போது எப்படி உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என கூட தெரியவில்லை. நான் வாங்கிட்டு திரும்பும்போது அங்கு என் அப்பா மாதிரி திருமாவளவன் உட்கார்ந்து இருந்தார். அவர் அந்நிகழ்ச்சியில் பார்வையாளராக, விருது கொடுப்பவராக வந்திருந்தார். மேடையை விட்டு இறங்கியது என் கால்களும், அந்த விருதும் நேராக அவரை நோக்கி தான் சென்றது. விருதை அவர் கையில் கொடுத்ததும் அதை வாங்கி திருமாவளவன் என்னை அணைத்துக் கொண்டார். அந்த தருணம் தான் என் வாழ்க்கையின் மிகச்சிறந்த விருதாக நான் நினைக்கிறேன்” என தெரிவித்தார்.