சமூகம் என்ன மாதிரியான உளவியலில் வாழ்கிறது என்பதை திருமாவளவனின் வீடியோ பார்த்தால் புரிந்துக் கொள்ள முடியும் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். 


தமிழில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களிடம் தனக்கென தனியிடம் பிடித்தவர் மாரி செல்வராஜ். இவருக்கு மாமன்னன் படத்துக்காக  எழுச்சித்தமிழர் இலக்கிய விருது வழங்கப்பட்டது.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விடுதலை கலை இலக்கியப் பேரவை நடத்தும் இளவந்திகை திருவிழாவின் ஒரு பகுதியாக எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் விழா இந்த விருதை விசிக தலைவர் திருமாவளவன் வழங்கினார். 


இந்நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ் திருமாவளவனுக்கும் தனக்குமான உறவு பற்றி நீண்ட உரையாற்றினார். அவர் தனது உரையில் போது, “சினிமா பண்ண தொடங்கிய பிறகு படிக்கும் நேரம் குறைந்து விட்டது. இந்த சமூகம் என்ன மாதிரியான உளவியலில் வாழ்கிறது என்பதை புரிந்துக்கொள்ள திருமாவளவனின் வீடியோ பார்த்தால் புரிந்துக் கொள்ள முடியும். 


ஒரு தலைவன் பரபரப்புக்காவே தன்னை தயார்படுத்திக் கொள்பவன் இல்லை. தன்னை நோக்கி வரும் அத்தனை அவதூறுகளையும், பரபரப்புகளையும் நிதானமாக நின்று சமாளித்து அடுத்த தலைமுறைக்கு சிந்தாமல் சிதறாமல் அதனை கற்றுக் கொடுப்பது தான் நம்பிக்கை. அதை திருமாவளவன் செய்துக் கொண்டிருக்கிறார். அவர் என்னுடைய 3 படங்களை பார்த்து போன் பண்ணி பேசினார். அதுமட்டுமல்லாமல் என்னைப் பற்றி ஏதாவது ஒரு சர்ச்சை போய்க் கொண்டிருந்தால் என்னவென்று விசாரிப்பார். 






எங்க அப்பாவுக்கு நான் படம் இயக்குவது மட்டும் தான் தெரியும். ஆனால் என்னை சுற்றி என்ன மாதிரியான அரசியல் போய்க் கொண்டிருக்கிறது, வன்மம் கட்டவிழ்க்கப்படுகிறது என்பதெல்லாம் தெரியாது, ஆனால் அப்பாவின் ஸ்தானத்தில் இருந்து பேசுபவர் திருமாவளவன். என்னுடைய அறிவுத்தந்தையே அவர் தான். எப்படிப்பட்ட சூழலில் இருந்து நான் வந்தேன் என்று அனைவருக்கும் தெரியும். ஒரு சிறு அசைவு நான் பிறண்டால் கூட இருக்கும் களம், இடம், அடிக்க வேண்டிய ஆள் என்பது வேறாகி விடும். 


எனக்கு எல்லா வாய்ப்பு இருந்தும் கலைதான் முக்கிய ஆயுதம் என்ற உறுதியோடு நான் இருக்க காரணம் எனக்கு முன்னாடி திருமாவளவன் இருப்பது தான். எது காலத்துக்கு மானுட சமூகத்துக்கு அவசியமோ, எது காலத்துக்கும் இந்த சமூகம் பெற வேண்டுமோ அதை நோக்கி போய்க் கொண்டிருக்கும் தலைவன் அவர் இருப்பதால் இது சாத்தியமாகி கொண்டிருக்கிறது” என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.