வாழை


மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாழை படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது. இப்பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர்  ராம் , பா ரஞ்சித் , சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் தானு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலையரசன் , நிகிலா விமல் , ஜே சதிஷ் குமார் , திவ்யா துரைசாமி , ஜானகி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.


சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்கள். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.


ரெட் ஜயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வாழை முதல் பாடல் வெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது கீழ்வருமாறு


இயக்குநர் ராம் பற்றி மாரி செல்வராஜ்


”என்னை இப்படியான ஒரு மனிதனாக உருவாக்கியதற்கு இயக்குநர் ராம் சாருக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் . உன்னோட வேல படம் பண்ணி காசு சம்பாதிப்பது இல்லை. நீ பாதிக்கப்பட்டவனாக இருந்திருக்க. உன்னோட கதைய நீ எப்போதும் அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்ன நடந்தாலும் பின் வாங்கிவிட கூடாது.


உன்னோட கதை என்பது உனக்கான கதை மட்டுமில்லை உனக்கு பின்னான சந்ததிகளுக்கானது என்று அவர் சொன்னதால் தான் நான் முழு க்க முழுக்க அந்த கதைகளுடனே பயணம் செய்துகொண்டே இருக்கேன். என்னுடைய கதைகளின் பாதிப்பில் இருந்து  நான் மீண்டு வெளியே வருவதற்கே கொஞ்ச நாட்களாகும். அப்படியான கதைகளை தான் நான் செய்துகொண்டிருக்கேன் . என் இயக்குநர் இருக்கும் வரை என்னிடம் ஒரு சிறு மாற்றத்தை கூட நீங்கள் எதிர்பார்க்க முடியாது. என்னை கவனித்துக் கொண்டிருக்கும் முக்கியமான கண்களில் என் இயக்குநரின் கண்களும் ஒன்று. அவரிடம் இருந்து திடீரென்று ஒரு ஃபோன் வந்தாலே நான் ஏன்ன தப்பு செய்தேன் என்று தான் யோசிப்பேன்.


ஏதாவது ஸ்டேட்டஸ் போட்டிருக்கேனா. அதிகப்பிரசங்கித்தனமாக ஏதாவது பேசியிருக்கேனா என்றுதான் பார்ப்பேன். நம் அப்பா அம்மாமேல் எப்படி பயம் வச்சிருப்போமே அது மாதிரிதான் அவர்மேல் எனக்கு, எப்போதும் என்னை சரியாக இருக்கச் சொல்லிக் கொண்டிருப்பார்” என்றார்