சென்னை விமான நிலையத்தின் இணையதள சேவை இன்று பகல் 12 மணியில் இருந்து திடீரென முடங்கியது. இணையதளம் சரியாக வேலை செய்யாமல், மிகவும் தாமதமாக செயல்பட்டதால், விமான பயணிகளுக்கு, கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 


மென்பொருள் பாதிப்பு


மென்பொருள் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, விமான நிறுவனங்கள், கவுன்டர்களில் கூடுதல் ஊழியர்களை நியமித்து, போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதிக் கொடுத்தனர். இதனால் ஒவ்வொரு பயணிக்கும் போர்டிங் பாஸ் கொடுப்பதற்கு தாமதம் ஆகியதால், பயணிகள் விமானங்களில் ஏறுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து மும்பை, லக்னோ, பெங்களூர், மதுரை, திருவனந்தபுரம், பாட்னா, சிலிகுரி, ஹைதராபாத், கோவை உள்ளிட்ட 40 -க்கும் மேற்பட்ட விமானங்கள், சென்னையில் இருந்து சுமார் 3 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.


என்ன காரணம் ?


இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால் விமானங்கள் திடீர் தாமதங்களுக்கு என்ன காரணம்? எப்போது நிலைமை சீராகும் என்று பயணிகளுக்கு, விமான நிறுவனங்கள் முறையான அறிவிப்புகள் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.


சென்னை விமான நிலையத்தில் திடீரென ஏற்பட்டுள்ள இந்த இணையதள தொழில்நுட்ப கோளாறு சீர் செய்யும் பணிகளில் பொறியாளர்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஓரிரு மணி நேரங்களில், இணையதள கோளாறு முழுமையாக சீரமைக்கப்பட்டு விமானங்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.


உலகம் முழுவதும் என்ன பாதிப்பு ?


உலகம் முழுவதும் பெரும்பாலான துறைகளில் இணையதளத்தின் வளர்ச்சி முக்கிய பங்காற்றி வருகிறது. உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் உள்ளது. இவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பட ஏராளமான மென்பொருட்களை தயாரித்து வருகின்றனர்.


கிளவுட் சாப்ட்வேர்: 


அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கியமான மென்பொருள்களில் ஒன்று கிளவுட். சாப்ட்வேர் மற்றும் விமான சேவை துறைகளில் கிளவுடின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. இந்த சூழலில், அமெரிக்காவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கிளவுட் மென்பொருள் பாதிக்கப்பட்டது. இதன் தாக்கம் உலகம் முழுவதும் பல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.


குறிப்பாக, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் கிளவுட் மென்பொருள் சேவை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. போர்டிங் பாஸ் வழங்குவதில் கிளவுட் மென்பொருள் சேவை முக்கிய பங்காற்றி வருகிறது. இதனால், பல விமானங்களின் சேவைகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கியமான விமான நிறுவனங்களான இந்தியன் ஏர்லைன்ஸ், இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.