திருவாரூர் மாவட்டத்தில் கோடை குறுவை நெற்பயிர் அறுவடை பாரம்பரிய வழிப்பாட்டு முறையுடன் தொடங்கிய நிலையில், மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


குறுவை சாகுபடி அறுவடை - பாரம்பரிய முறைபடி தொடங்கியது


காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குருவை, சம்பா, தாளடி என மூன்று போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் சரிவர கிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் கடந்து சில ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு ஆழ்துளை கிணறு, போர்வெல் மூலமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வலங்கைமான் மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.  இந்நிலையில் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக விவசாயிகள் மிகப்பெரிய மகசூல் இழப்பை சந்தித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.


மகசூழ் இழப்பில் விவசாயிகள் வேதனை


திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை குறுவை நெற்பயிர் சாகுபடி பணியில் மாவட்டம் முழுவதும் சுமார் 21 ,000 ஏக்கர் பரப்பளவில் ஆழ்துளை கிணறு மூலமாக விவசாயிகள் நெற்பயிர் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த மாதம் பருவம் தவறிய பெய்த கனமழையால் கோடை கால குறுவை நெற்பயிர்கள் மழை நீரால் சாய்ந்தது. பிறகு விவசாயிகள் மழைநீரை வடியவைத்தும் அதற்கான உரங்களை தெளித்தும் நெற்பயிர்களை காப்பாற்றி வந்தனர்.  ஆனால், அவர்கள் நினைத்ததை விட அதிக மழை பெய்ததால் முழுமையாக நெற்பயிற்களை அப்போதே விவசாயைகளால் காப்பாற்ற முடியவில்லை.


வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து பூசை செய்த விவசாயிகள்


இந்த நிலையில் தற்போது நன்னிலம் பகுதியில் கோடைகால குருவை பயிர் அறுவடை பணிகள் இன்று தொடங்கியது. விவசாயிகள் நெல் பயிர்களுக்கு வெற்றிலை பாக்கு வாழைப்பழம் பூ  பொட்டுக்கடலை சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வைத்து படைத்து தீபாராதனை காண்பித்து சூரியனுக்கு வழிபாடு செய்த பின்னர் பெண்கள் பாரம்பரிய முறைப்படி அறிவாள் மூலம் நெற்கதிர்களை சிறிது தூரம் அறுத்து அறுவடை செய்த பின் நெல் அறுவடை இயந்திரத்தை கொண்டு அறுவடை பணிகளில் ஈடுபட்டனர்.


விவசாயி சொல்லும் வேதனை கதை


இதுகுறித்து விவசாயி குமரகுருபரன் கூறுகையில் :  பருவம் தவறி பெய்த மழையால் கோடை நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பாரம்பரிய முறைப்படி சூரிய பகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அறிவாளால் சிறிது நேரம் அறுவடை செய்த பின்னர், கதிர் இயந்திரம் கொண்டு அறிவுடைப்பணியில் ஈடுபட்டோம். மேலும் மழையின் காரணமாக கூடுதல் செலவு செய்து தற்பொழுது அறுவடை பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஒரு ஏக்கருக்கு சாதாரணமாக 30 முதல் 35 மூட்டை நெல் மணிகள் கிடைத்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு 12 மூட்டை கிடைப்பதே சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயி வேதனை தெரிவித்தார்.


மேட்டூர் அணையும் திட்டமிட்டபடி ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படாததால் வரும் காலங்களில் எப்படி விவசாயம் செய்வது என்று தெரியவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.