எஸ்.டி.பி.ஐ தமிழ் சுடர் விருதுகள் 2024


SDPI கட்சியின் தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள பைஸ் மஹாலில் கடந்த ஜூலை.13 மாலை நடைபெற்றது.எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்ச்சுடர் விருதுகளை வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்ச்சியில் அஇஅதிமுக இலக்கிய அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.


கேப்டன் விஜயகாந்திற்கு காயிதே மில்லத் விருது


இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேமுதிக நிறுவனர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கான விருதினை தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் வழங்கி கெளரவித்தார்.


மாரி செல்வராஜூக்கு டாக்டர் அம்பேத்கர் விருது






டாக்டர் அம்பேத்கர் விருது திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜூக்கு வழங்கப் பட்டது. இந்த விருதினைப் பெற்றுக் கொண்ட மாரி செல்வராஜ் இப்படி பேசினார் “நாம் ஒரு வேலையை செய்கிறோம். அந்த வேலையை தீவிரமாக செய்கிறோம். அப்படி நம் வேலையை சமூகத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கும்போது யார் நம் வேலையை எதிர்க்கிறார்கள். யார் நம்மை ஆதரிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வது ரொம்ப முக்கியம். அதை புரிந்துகொண்டால் தான் நம் வேலை பலப்படும். அப்படி என் வேலையை பலப்படுத்தும் விதமாக எஸ்.டி.பி.ஐ வழங்கிய இந்த விருது அமைந்துள்ளது. இந்த விருதினை எனக்கு வழங்கியதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.


விருது பெற்றவர்கள்


இவர்கள் தவிர்த்து தந்தை பெரியார் விருது  உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.ஜிம்ராஜ் மில்டன் அவர்களுக்கும், கவிக்கோ விருது எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான தோழர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கும், பழனிபாபா விருது தமிழக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் திரு. கே.எம்.சரீப் அவர்களுக்கும், இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் விருது இயற்கை விவசாய ஆர்வலர் திரு. சஜாத் அலி அவர்களுக்கும், அன்னை தெரசா விருது சமூக ஆர்வலர் திருமதி. பரீஹா சுமன் அவர்களுக்கும், சயீத் சாஹிப் விருது கோவை மத்திய மாவட்ட எஸ்டிபிஐ தலைவர் திரு. முஸ்தபா அவர்களுக்கும் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் வழங்கி கெளரவித்தார்.