உலகில் அதிகளவு ரசிகர்களை கொண்ட விளையாட்டுகளாக கால்பந்து, கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் உள்ளது. இந்த போட்டிகளை மிக அதிகளவில் ரசித்தவர்களும், இந்த போட்டிகளில் ஆடிய வீரர்களை அதிகளவில் கொண்டாடிய ரசிகர்களாகவும் இருப்பவர்கள் 90-களில் பிறந்தவர்கள். சமூக வலைதளங்கள் வருவதற்கு முன்பும், சமூக வலைதளங்களில் வருகைக்கு பிறகும் அந்தந்த விளையாட்டுகளில் ஆடியவர்களை அதிகளவில் கொண்டாடிய ரசிகர்கள் ஆவார்கள்.
90களில் பிறந்தவர்கள் மட்டுமின்றி அதற்கு முன்பு பிறந்தவர்களும் 2கேவில் பிறந்தவர்களும் அதிகளவில் கொண்டாடிய ஜாம்பவான்களும் மேலே குறிப்பிட்ட விளையாட்டுகளில் ஆடி வருகின்றனர். ஆனால், அவர்களின் சகாப்தங்கள் முடிவுக்கு வருகிறது. ரசிகர்களால் நம்மால் இதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தாலும், அடுத்த தலைமுறை வீரர்களை வரவேற்க வேண்டியது அவசியம் ஆகும்.
கிரிக்கெட்:
இந்தியாவில் அதிகளவு ரசிகர்களை கொண்ட விளையாட்டாக இருப்பது கிரிக்கெட் ஆகும். நடப்பு டி20 உலகக்கோப்பையை வென்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தந்தது இந்திய அணி. அதேசமயம் இந்திய அணியின் நட்சத்திரங்களான ரோகித்சர்மா மற்றும் விராட் கோலி சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இவர்கள் இருவரும் ஓய்வு பெறுவார்கள் என்று கருதப்படுகிறது. அதேபோல, ஐ.பி.எல். தொடரில் மட்டுமே ஆடும் தோனியும் அடுத்த சீசன் அல்லது அதற்கு அடுத்த சீசன் வரை மட்டுமே ஆடுவார் என்று கருதப்படுகிறது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டும், வயது காரணமாகவும் இவர்கள் தங்களது கிரிக்கெட் கேரியரை முடிவுக்கு கொண்டு வருகின்றனர்.
கால்பந்து:
உலகின் அதிகளவு ரசிகர்களை கொண்ட விளையாட்டாக இருப்பது கால்பந்து. பீலே, மாரடோனா, ரொனால்டினோ போன்ற ஜாம்பவான்களுக்கு பிறகு கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட வீரராக கால்பந்து உலகில் உலா வருபவர்கள் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியும், போர்ச்சுக்கல்லின் ரொனால்டோவும் ஆவார்கள். கால்பந்து ரசிகர்கள் ஒவ்வொருவருக்குமே இவர்கள் இருவருமே கதாநாயகர்களாக உள்ளனர்.
கோபா கோப்பையை அர்ஜெண்டினாவிற்கு வென்று கொடுத்த மெஸ்ஸிக்கு 37 வயதும், ரொனால்டோவிற்கு 39 வயதும் ஆகிறது. மைதானத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய விளையாட்டான கால்பந்தில் இவர்கள் இன்னும் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே ஆடுவார்கள் என்று கருதப்படுகிறது. அடுத்த தலைமுறை வீரரான எம்பாஃபே போன்றவர்கள் இனி வரும் கால்பந்து உலகை ஆள்வார்கள் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
டென்னிஸ்:
இன்றளவும் ஜென்டில்மேன் விளையாட்டாக கருதப்படும் விளையாட்டாக டென்னிஸ் உள்ளது. விம்பிள்டன் ஓபன், பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் என்று புகழ்பெற்ற பட்டங்கள் மட்டுமின்றி ஏராளமான கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் நடைபெற்று வருகிறது. இந்த டென்னிஸ் உலகை 2000-த்திற்கு பிறகு கட்டியாண்டவர்கள் ரோஜர் பெடரர், ரபெல் நடால், ஜோகோவிச். இவர்களில் பல கிராண்ட்ஸ்லாம்களை வென்ற பெடரர் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று விட்டார்.
மற்றொரு ஜாம்பவான் வீரரான நடாலுக்கும் 38 வயதாகிவிட்டது. இவர்கள் இருவருக்கும் கடும் சவால் தரும் ஜோகோவிச்சுக்கும் 37 வயதாகிவிட்டது. இதனால், ஜோகோவிச், நடால் இன்னும் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே ஆடுவார்கள் என்று கருதப்படுகிறது. இதனால், டென்னிஸ் உலகிலும் அடுத்த தலைமுறை வீரர்களான அல்காரஸ், அலெக்சாண்டர் ஜூவெரவ், ஜின்னர், மெத்வதேவ் போன்ற வீரர்கள் தங்களது கால்தடம் பதித்து வருகின்றனர்.
தோனி, கோலி, ரோகித், மெஸ்ஸி, ரொனால்டோ, ஜோகோவிச், நடால் ஆகிய ஜாம்பவான் வீரர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் தங்களது விளையாட்டு வாழ்க்கையின் இறுதிகட்டத்தில் இருப்பது ரசிகர்களுக்கு வருத்தமான ஒன்றாக இருந்தாலும், புதிய தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்க அவர்கள் வழிவிட வேண்டியதும் அவசியமான ஒன்றாகவும் உள்ளது.