என்ன ஆகப்போகிறேன் என தெரியாமல் இருந்த என்னை கலை இந்தளவுக்கு மாற்றி விட்டது என இயக்குநர் மாரி செல்வராஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் பிஏபிஎல் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ள அவர் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநராக கொண்டாடப்படுகிறார்.மாற்று சினிமாவுக்கான விதைகளையும், திரைப்படங்களின் வழி மாற்றத்திற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் மாரி செல்வராஜின் படைப்புகள் ஒவ்வொன்றும் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறி வருகிறது. 


தற்போது துருவ் விக்ரமை வைத்து படம் ஒன்றை இயக்கி வரும் கடைசியாக நடிகர் உதயநிதி நடித்த மாமன்னன் படத்தை இயக்கியிருந்தார். கடந்த ஜூன் மாதம் வெளியான இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், வடிவேலு, சுனில் குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு பாராட்டையும் பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் மாரி செல்வராஜ். 


இதனிடையே  திருநெல்வேலியில் மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்படும் தூய சவேரியார் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக நடைபெற்ற ‘தமிழம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாரி செல்வராஜ் பங்கேற்றார். இதில் பேசிய அவர், ”நான் இதே கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் முடியாமல் போய் விட்டது. அதேசமயம் எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகவும், நேர்மையாகவும் பயன்படுத்தி வந்துள்ளோம்.


இந்த மேடையில் நிறைய படித்த மேலானவர்கள் இருந்தாலும் அவர்களை எல்லாருக்கும் தெரிவதில்லை. மாறாக மாரி செல்வராஜ் என சொன்னதும் தெரிகிறது என்றால் நான் கலைவழி இயங்குவதாலும், அறம் சார்ந்து பேசுவதாலும் மட்டும் தான். என்ன ஆகப்போகிறேன், என்ன நடக்கப் போகிறது என தெரியாமல் இருந்த என்னை கலை இந்த அளவுக்கு மாற்றி விட்டது. 


அதனால் தனிமையை கொண்டாடுங்கள். சின்ன சின்ன பேப்பரை கூட படிக்காமல் விடமாட்டேன். புத்தகம் படிக்கும்போது என்னை பைத்தியக்காரன், முட்டாள் என திட்டுவார்கள். ஆனால் நான் படித்த புத்தகங்கள் தான் இந்த அளவுக்கு மாற்றி இருக்கிறது. நாம் சக மனிதர்களை மனிதனாக மதிக்க வேண்டும், அவர்களோடு பேச வேண்டும்.


நாம் வாழ்க்கையில் ஜெயிக்கிறோம், தோற்கிறோம் என்பதை விட யாரையும் காயப்படுத்தாமல், தொந்தரவு செய்யாமல் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும். இப்படியான மேடைகளில் என்னை பேச அழைக்கிற போது நான் நல்ல படங்களை தான் எடுத்திருக்கிறேன் என்ற தெம்பை எனக்கு கொடுத்துள்ளது. அதுவும் மாணவர்கள் மத்தியில் என்கிறபோது சரியான இடத்திற்கு தான் கொண்டு போய் இருக்கிறோம் என்று அர்த்தம்” என மாரி செல்வராஜ் பேசியுள்ளார். 




மேலும் படிக்க: Viral Video : "தில்லானா..தில்லானா” .. காதல் மனைவி கீர்த்தியுடன் ஆட்டம் போட்ட அசோக் செல்வன்.. வைரல் வீடியோ..!