இயக்குநர் மாரி செல்வராஜின் முதல் படமாக உருவான ‘பரியேறும் பெருமாள்’ படம் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 


 ‘பரியேறும் பெருமாள்’ B.A.B.L


இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரான இப்படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, இயக்குநர் மாரிமுத்து, பூ ராமு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனசாட்சியை தங்களுக்கு தாங்களே கேள்வி கேட்டும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. 


படத்தின் கதை 


இந்த படமானது தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ஊரான திருநெல்வேலியை களமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தங்கள் குரல்  ஓங்கி ஒலிக்கும் குரலாய் மாற வேண்டும் என்ற எண்ணத்தோடு புளியங்குளம் எனும் கிராமத்தில் இருந்து சட்டப்படிப்பு படிக்க வருகிறார் பரியேறும் பெருமாள் (கதிர்). அங்கு உடன் படிக்கும் சக மாணவியான ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஜோதிக்கு (‘கயல்’ ஆனந்தி) பரியன் மீது ஒரு அன்பு. ஆனால் அதே வகுப்பில் படிக்கும் ஆனந்தியின் உறவுக்காரரான லிங்கேஷூக்கு எரிச்சலூட்டுகிறது. தன் சாதிய அடக்குமுறையை காட்டவும், இதன் பின்னால் பரியேறும் பெருமாள் வாழ்க்கை என்னானது என்பதே இப்படத்தின் மீதி கதை 


அதிர்ச்சியூட்டிய சாதிய வன்முறைகள் 


உலகமயமாதலுக்குப் பின்னும் தொடரும் சொல்லப்போனால் சமூகத்தின் பிணியாய் பிணைந்துள்ள சாதியத்துக்கு எத்தகைய கோர முகங்கள் உள்ளது என்பதற்கு இப்படமே சாட்சி. படத்தின் படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பரியனின் கருப்பி நாய், மேல் சாதியினரால் கொல்லப்படுவதிலேயே மொத்த கதையும் சொல்லப்படுகிறது. 


படிக்கும் இடத்தில், பேருந்தில், ஊர் திருவிழாவில் என எங்கும் எங்கெங்கும் சாதிய வேறுபாடுகள், சாதி மாறிய காதலுக்காக தங்கள் மகளை   பெற்றோர்களே கொன்று நடிப்பது, உயர் சாதிப் பெண்களுடன் நட்பு ரீதியிலாக கூட பேசக்கூடாது என சொல்லுவது, கல்வி நிலையங்களில் கிண்டலுக்கு உள்ளானது, உண்டியல் திருட்டிற்காக  ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்களை சந்தேகிப்பது என படம் முழுக்க தான் பட்ட கஷ்டங்களையும், தன்னை சுற்றி நடந்த வடுவாக அமைந்த சம்பவங்களையும் காட்சிகளாய் அடுக்கி சமூகத்தின் முகத்தில் ஓங்கி அறைந்திருப்பார் மாரி செல்வராஜ். குறிப்பாக திருமண நிகழ்வுக்கு வந்த இடத்தில் கதிர் மீது சிறுநீர் கழித்து அவமானப்படுத்துவதெல்லாம் நினைத்தாலே நடுக்கத்தை ஏற்படுத்தி விடும் அளவுக்கு எடுக்கப்பட்டிருந்தது. 


மொத்த படத்தையும்  ஒற்றை ஆளாகத் தாங்கிப் பிடிக்கும் கதிர், ஒட்டுமொத்த சமூகத்தில் முன்னேற துடிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்பது நிதர்சனம். உயர்சாதியினராக இருந்தால் படிக்கும் இடத்தில் சாதி பாராமல் பழகும் யோகிபாபு, சாதி என்றாலே என்ன என்பதை காட்டாத கயல் ஆனந்தி என ஒவ்வொரு கேரக்டரும் ஒரு ரகம்.  ஆனந்தியின் தந்தையாக வரும் மாரிமுத்து, உறவுக்காரராக வரும் லிங்கேஷ் இருவரும் சாதியத்தின் கோர முகங்கள். 


சிலிர்க்க வைத்த காட்சிகள் 


கூத்து கலைஞராக இருக்கும் தன் அப்பாவை , முதலில் கல்லூரிக்கே அழைத்து செல்ல தயங்கும் கதிர், பின்னாளில் தன் அப்பாவை அறிமுகம் செய்யும் காட்சி, ஒடுக்கப்பட்டவர்கனாக இருந்தால் கல்வி ஒருவருக்கு எத்தகைய மரியாதையை ஏற்படுத்தும் என விளக்கும் பூ ராமுவின் காட்சி, ‘மனிதத்தை' நோக்கி நகர்த்தப்பட்ட படத்தின் கிளைமேக்ஸ் காட்சி என பல காட்சிகள் சிலிர்ப்பூட்டின. கடைசியில் சொல்லப்படும் “நீங்க நீயா இருக்க வரைக்கும்.. நாங்க நாயா இருக்க வரைக்கும்..இங்க எதுவுமே மாறாது” என சொல்லும் அந்த ஒற்றை வசனம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பரியேறும் பெருமாளை தோள் மேல் தூக்கி வைத்து ஊர்வலம் வந்து கொண்டாட வைக்கும்...!




மேலும் படிக்க: Swathi Reddy: மேடையில் பிரபல நடிகருக்கு முத்தம் கொடுத்த நடிகை சுவாதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!