பொன்னியில் செல்வன் 2 ஆம் பாகத்தில்  இடம்பெறும் ஒரு முக்கியமான விஷயத்தை பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். 


பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பார்த்திபன், த்ரிஷா, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால்,ஜெயசித்ரா,நாசர், ரகுமான், கிஷோர் என பலரும் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 


இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர்  வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த மார்ச் 29-ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். மேலும் அமைச்சர் துரைமுருகன், நடிகர் சிலம்பரசன், இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 


இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிலையில், படக்குழு தீவிர ப்ரோமோஷனில் களமிறங்கியுள்ளது. அந்த வகையில் சென்னையில் நேற்று பொன்னியின் செல்வன் 2 குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர் மணி ரத்னம், நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா துலிபாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


இரண்டாம் பாகத்திலும் கமல்ஹாசன்


அப்போது இயக்குநர் மணிரத்னத்திடம், பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் நடிகர் கமல்ஹாசனின் பின்னணி குரலில் தான் படம் தொடங்கும். இரண்டாம் பாகத்திலும் அதனை எதிர்பார்க்கலாமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்” என மணிரத்னம் பதிலளித்தார். 


தொடர்ந்து முதல் பாகம் ரிலீசான போது எழுந்த ராஜராஜசோழன் இந்து மன்னனாக காட்டி, தமிழர்களின் அடையாளம் பறிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “எதுக்கு இதுல்ல மதம் சம்பந்தமாக எல்லாம் கொண்டு வருகிறீர்கள். பொன்னியின் செல்வன் படம் வரலாற்றுப் புனைவாகும். ராஜராஜசோழன் செய்த செயல்களுக்கும், சாதனைகளுக்கும் நாம் பெருமை கொள்ள வேண்டும். எனவே இதுபோன்ற  கருத்துகள் தேவையில்லாதவை என மணிரத்னம் தெரிவித்தார்.  


பொன்னியின் செல்வன் 


கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் அதே பெயரில் இரண்டு பாகங்களாக படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, நாவல் படித்தவர்களையும் சரி, படிக்காதவர்களையும் சரி இப்படம் வெகுவாக கவர்ந்தது. வசூலிலும் ரூ.500 கோடிக்கு மேல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.