தமிழ்நாட்டில் முதல்முறையாக சித்த மருத்துவத்துக்கென தனிப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, ஆளுநரிடம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதற்கு இரண்டாவது முறையாக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 


2021-22 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கையின்போது நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன், சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றை தனியாக அமைப்பதற்கு ரூ.2 கோடி முதலில் ஒதுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அவர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், “கருணாநிதி தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை அமைக்க திட்டமிட்டார். அதற்கு உரிய நிலமும் கண்டறியப்பட்டது. அதற்கு பின், இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. மற்ற உள்நாட்டு மருத்துவ முறைகளைப் போல சித்தாவிற்கும் உரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக, தமிழ்நாடு சித்தா பல்கலைகழகத்தை இந்த அரசு அமைத்திடும்” என்று அதில் அறிவிக்கப்பட்டிருந்தது.


இதற்கிடையில், தமிழ்நாட்டில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த ஆண்டே உறுதி செய்தார்.


இதற்காக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். ஆளுநர் அந்த மசோதாவை திருப்பி அனுப்பி சில ஐயங்களை கேட்டிருந்தார். குறிப்பாக, சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் நடக்குமா? தேசிய தேர்வு முறைகளை இந்த சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் ஏற்று அதன்படி நடக்குமா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. 






இதற்குத் தமிழக அரசு சார்பில் பதில் அனுப்பப்பட்டது. அதில், வழக்கமாக மருத்துவக் கல்லூரிகளில் என்ன மாதிரியான நடைமுறைகள் இருக்கிறதோ அதே நடைமுறைகள்,  சித்த மருத்துவ பல்கலைக் கழகத்துக்கும் பின்பற்றப்படும். எதிர்காலத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைத்தால் நிச்சயம் சித்த மருத்துவ பல்கலைக் கழகத்துக்கும் அதே விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று சட்ட வல்லுநர்கள் மூலம் பதில் அனுப்பப்பட்டது. இந்த பதில்,  கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுவிட்டது. 


6 மாதங்களை கடந்த நிலையில், 2 ஆவது முறையாக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், மசோதாவைத் திருப்பி அனுப்பி உள்ளார். இந்தத் தகவலை  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்ட மன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பல அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


இதையும் வாசிக்கலாம்: SSC Exam in Tamil: முதல்முறை; இனி தமிழிலும் எஸ்எஸ்சி தேர்வை எழுதலாம்- மத்திய அரசு அறிவிப்பு