கே.ஜி.எஃப் 2, ஆர்.ஆர்.ஆர் முதலான பிற மொழித் திரைப்படங்களின் வெற்றி குறித்தும், தமிழ் சினிமாவின் தரம் குறித்தும் பிரபல இயக்குநர் மணி ரத்னத்திடம் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது அவர் தமிழ் சினிமா குறித்தும், அதன் புதிய இயக்குநர்கள் குறித்தும் தாம் பெருமிதம் கொள்வதாகக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பிற மொழித் திரைப்படங்களின் வெற்றி குறித்து இயக்குநர் மணி ரத்னத்திடம் கேட்கப்பட்ட போது, அவர், `தமிழ்நாட்டில் பிற மொழித் திரைப்படங்களின் வெற்றி என்பது புதிய விவகாரம் அல்ல. இது முன்பிருந்தே இருக்கும் ஒன்று. தற்போது வரிசையாக பிற மொழித் திரைப்படங்கள் வெற்றி பெற்றிருப்பதாலும், குறிப்பாக வட இந்தியாவில் இந்தத் திரைப்படங்கள் பெரிய வெற்றியை ஈட்டி இருப்பதாலும் இந்த விவாதம் எழுந்திருப்பதாக எண்ணுகிறேன். இதற்கு முன்பு தமிழில் நாம் உருவாக்கிய `சந்திரலேகா’ திரைப்படம் வட இந்தியாவில் வெற்றிக் கொடி நட்டது. அப்போது நாம் இந்தக் கேள்வியை எழுப்பவில்லை. ஒரு திரைப்படத்தைப் பலர் பார்ப்பது மிகவும் நேர்மறையான ஒன்று. இதை உங்களாலும் தடுக்க முடியாது; என்னாலும் தடுக்க முடியாது. ஹாலிவுட்டில் இருந்து வரும் திரைப்படங்களைத் தமிழில் டப் செய்து பார்க்கிறோம்.. அதுவே கன்னடத்தில் இருந்து வந்தால் என்ன தவறு? இந்த நடைமுறை தொடரும்.. எனவே பெரிய திரைப்படங்களை உருவாக்கும் போது, அவற்றை நேர்த்தியாக செய்வது அவசியம். ஒரு திரைப்படத்திற்குப் பெரிய அளவில் பணத்தைச் செலவு செய்கிறோம்.. செலவு செய்யும் பணத்தைத் திரையில் எப்படி கொண்டு வருகிறோம் என்பது தான் நமது குறிக்கோள். அதைத் திரையில் கொண்டு வந்து, அனைவரையும் ரசிக்க வைப்பதற்காகவே நாங்கள் அனைவரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.
தற்போது தமிழ்த் திரைப்படங்கள் வெளி மாநிலங்களில் வெற்றி பெறாமல் இருப்பது பற்றி கேட்ட போது, `நல்ல திரைப்படங்கள் எடுத்தால் நிச்சயமாக வெளி மாநிலங்களில் அவை வெற்றி பெறும். அது படக்குழுவினரின் கைகளில் தான் இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.
`தென்னிந்திய சினிமாவின் தாயகமாக சென்னை இருந்து வருகிறது.. தற்போது சென்னையில் இருந்து வெளிவரும் திரைப்படங்களையும், தமிழ் சினிமாவையும் நாமே குறைத்து சொல்வதைப் போல எழுந்துள்ள கருத்துகளை எப்படி பார்க்கிறீர்கள்’ எனக் கேள்வி எழுப்பப்பட்ட போது, இயக்குநர் மணிரத்னம், `நிச்சயமாக அப்படி இல்லை. தமிழ் சினிமாவின் தரம் உயர்வான ஒன்று. நல்ல, திறமையான பல திரைப்பட இயக்குநர்கள் இங்கே நம்மிடம் இருக்கிறார்கள். மேலும், புதிதாக பல்வேறு திறமை கொண்ட இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் இங்கே உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். பல்வேறு புதிய கதைக்களங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். எனவே தமிழ் சினிமா இதுகுறித்து எல்லாம் கவலை கொள்ளவே வேண்டாம். நம்மிடன் சொத்தாக திறமை இருக்கிறது; பல்வேறு புதிய இயக்குநர்கள் இங்கு வெற்றி பெறுகிறார்கள்.. நான் இவற்றின் காரணமாக பெருமிதம் கொள்கிறேன்’ என்று கூறி முடித்துக் கொண்டார்.