ஜீவா நடித்த  'சிவா மனசுல சக்தி' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ராஜேஷ். முழுக்க முழுக்க காமெடி ஜானர் படமாக அவர் உருவாகியிருந்த இந்தப்படத்தில், இப்போதைய தலைமுறைக்கான காதலை ராஜேஷ் கையாண்டிருந்த விதமும், இடையில் வந்த அம்மா செண்டிமெண்டும் மக்களுக்கு பிடித்திருந்தது. அதைத்தொடர்ந்து பாஸ் என்ற பாஸ்கரனிலும், ஒரு கல் ஒரு கண்ணாடியிலும் அதே காமெடி ஃபார்முலாவை பிடித்த ராஜேஷ் ஹிட் கொடுத்தார். 


                                         


அந்த ஹிட்களுக்கு முக்கிய காரணம் ராஜேஷின் வசனங்கள்.. கேட்ட உடன் கேட்ஜ்சியாக இருக்கும் ராஜேஷின் டயலாக்ஸ் படத்தை போர் அடிக்காமல் கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றும் வகையில் அமைந்திருக்கும். இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு இவர் எழுதிய வசனங்கள் அந்தப் படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்காற்றியது என்றே சொல்ல வேண்டும்.                               
                                         


ஆனால் அதற்கடுத்தபடியாக இவரது இயக்கத்தில் வந்த “ஆல் இன் அழகுராஜா”, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, “ கடவுள் இருக்கான் குமாரு” உள்ளிட்ட படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்தது. இதற்கடுத்த படியாக இவர் சிவகார்த்திகேயனோடு மிஸ்டர் லோக்கல் படத்தில் இணைந்தார். இந்தப்படமும் அட்டர் ப்ளாப் ஆனது. அடுத்ததாக, இவரது இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் “வணக்கம் டா மாப்ள” தோல்வி அடைந்தது. இந்த நிலையில்தான் இவர் ஜெயம் ரவியுடன் இணைய இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.


இது மட்டுமல்ல இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். அரைத்த மாவை அரைப்பதில் ரசிகர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால் அதையும் அவர்களுக்கு சுவாரஸ்சியம் குறையாமல் கொடுக்க வேண்டும். காமெடி ஜானர் என்றாலும், அதில் சில வித்தியாசங்களை புகுத்த வேண்டும். அதை ஜெயம் ரவி படத்தில் ராஜேஷ் செய்வாரா.. பொறுத்திருந்து பார்க்கலாம்.                                


பூமி படத்தில் பெரும் தோல்வியை சந்தித்த ஜெயம் ரவி தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள அவர் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில்  ‘அகிலன்’ படத்தில் நடித்து வருகிறார்.