குட்டிப் புலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி கொம்பன், மருது, கொடிவீரன், புலிக்குத்தி பாண்டி, விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி கவனமீர்த்தவர் இயக்குநர் முத்தையா. கிராமத்து பின்னணியில் திரைப்படம் எடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றாலும் சாதிப்பெருமை பேசும் திரைப்படங்களை இவர் இயக்கி வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


இறுதியாக நடிகர் ஆர்யாவை வைத்து இவர் சென்ற ஆண்டு இயக்கிய காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இயக்குநர் முத்தையாவின் அடுத்த படம் பற்றிய சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது. தனது அடுத்த படத்தின் மூலம் தனது மகன் விஜய் முத்தையாவை திரையுலகில் ஹீரோவாக  அறிமுகப்படுத்த உள்ளார் இயக்குநர் முத்தையா.




முத்தையாவின் படங்கள் கிராமத்து பின்னணியில் படமாக்கப்படும் நிலையில், இந்தப் படத்தின் கதை மதுரை மாவட்டத்தை சுற்றி நகர்வதை போன்று எழுதி இருக்கிறார்.


மேலும், இளைஞர்களை மையப்படுத்திய எமோஷனல் டிராமாவாக இந்தப் படம் இருக்கும் என்றும், விஜய் முத்தையா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா ஆகியோர் ஹீரோயின்களாக  நடிக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க புதுமுகங்களை இந்தப் படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் முத்தையா திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.




மேலும், இந்த படத்தின் மிகமுக்கிய சண்டைக் காட்சி ஒருவாரம் படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக பெரும் பொருட்செலவில் சினிமா திரையரங்கை செட்டாக உருவாக்கி உள்ளனர். இந்தப் படத்தை கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பணிகள் எம். சுகுமார் மேற்கொள்ள, வெங்கட்ராஜூ படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்தப் படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். கலை இயக்குனராக வீரமணி கணேசன் பணியாற்ற இருக்கிறார்.


கோலிவுட்டில் கார்த்தி, ஆர்யா, விஷால் எனப் பல முன்னணி நடிகர்களை வைத்து படமெடுத்தும் முத்தையாவின் படங்கள் எதிர்பார்த்தை வெற்றியைப் பெறாத நிலையில், தற்போது தன் மகன் உள்ளிட்ட புதுமுகங்களைக் கொண்டு இளைஞர் பட்டாளத்துடன் இம்முறை முத்தையா களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் உருவாக காரணமான புத்தகம்.. ரகசியத்தை சொன்ன ராஜ்குமார் பெரியசாமி!


18 Years of Thambi: நடிக்க மறுத்த மாதவன்.. திசை மாறிய சீமானின் வாழ்க்கை.. தம்பி படத்தால் வந்த சோதனை