நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் உலகமெங்கும் வெளியாகியுள்ள ரசிகர்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்த லியோ திரைப்படம் தியேட்டரில் வெளியாகியுள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் லியோ படம் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர்,மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி என இந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
முன்னதாக இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வெளியானது. ரசிகர்களை மிகப்பெரிய அளவில் லியோ ட்ரெய்லர் கவர்ந்த நிலையில் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மாநில எல்லைகளில் உள்ள ரசிகர்கள் அதிகாலை காட்சிகளுக்காக கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு படையெடுத்தனர். மேலும் படம் ரிலீசாவதற்கு முன்பே காட்சிகள் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சமூக வலைத்தளங்கள் தொடங்கி எங்கு திரும்பினாலும் லியோ படம் பற்றிய பேச்சு தான் சென்று கொண்டிருக்கிறது. இணையத்தில் பல ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது. இப்படியான நிலையில் லியோ படம் வெளியாவதை முன்னிட்டு ரசிகர்களுக்கு நள்ளிரவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் ஒன்றை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “லியோ படம் ரிலீஸ் ஆகும் இந்நேரம் மிகவும் உணர்வுப்பூர்வமாக உள்ளது. என்னுடைய எண்ணத்தை முன்னெடுத்து செல்ல உதவிய தளபதி விஜய் அவர்களுக்கு நன்றி. எங்களிடம் நீங்கள் காட்டிய அர்ப்பணிப்புக்காக நான் உங்களை எப்போதும் மதிக்கிறேன். இப்படத்திற்காக ரத்தத்தையும் வியர்வையையும் சிந்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. படத்துக்கான பணிகள் தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாக இரவும், பகலும் கடுமையாக உழைத்து இந்த படைப்பை கொடுத்துள்ளோம்.
அதற்கான தருணம் எதையும் என்னால் மறக்க முடியாது. இந்த படத்துக்காக பணிபுரிந்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அன்பான ரசிகர்கள் எனக்கு அளித்த அன்புக்கும் ஆதரவுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். லியோ படம் அற்புதமான காட்சி அனுபவங்களை உங்களுக்கு கொடுக்கும் என நம்புகிறேன். ஒவ்வொரு ரசிகர்களுக்கும் இத்தகைய தர விரும்புவதால் படத்தை பற்றிய ஸ்பாய்லர்கள் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் ‘LCU’-ன் கீழ் வருகிறதா, இல்லையா என்ற உங்களது அனைத்து கேள்விகளுக்குமான பதிலை படம் பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.