அனைத்து விதமான சோஷியல் மீடியாவில் இருந்து சிறிது காலத்துக்கு விலகுவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி படம் மூலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பின்னர், மாஸ்டர் படம் மூலமாக விஜயுடன் கைகோர்த்து முன்னணி இயக்குனராக உருவானார். அனைத்து திரைப்படங்களையும் தூக்கிச் சாப்பிடும் விதமாக சமீபத்தில் அவர் இயக்கி வெளியான விக்ரம் திரைப்படம் சக்கைப்போடு போட்டது. வசூலில் வேறலெவல் சாதனையை படைத்தது.
கேஜிஎஃப் வசூல் சாதனையை தாண்டி கெத்துக்காட்டிய விக்ரம் படத்தின் 50வது நாள் வெற்றி கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இப்படி வெற்றியால் திக்குமுக்காடிபோன லோகேஷ் அனைத்து யாருடன் பயணப்படப்போகிறார் என ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். விரைவில் ஏதேனும் அறிவிப்பு வெளியிடுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்த நேரத்தில் அனைவருக்கும் ஷாக் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் லோகேஷ். சிறிது காலத்துக்கு அனைத்து விதமான சோஷியல் மீடியாவில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள லோகேஷ்,
’’நண்பர்களே, நான் அனைத்து சமூக ஊடக தளங்களில் இருந்தும் சிறிய இடைவெளி எடுக்கிறேன். எனது அடுத்த படத்தின் அறிவிப்புடன் விரைவில் வருவேன். அதுவரை உங்கள் அனைவரையும் கவனித்துக் கொள்ளுங்கள்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தப்பட வேலையில் கவனத்தை செலுத்தவே லோகேஷ் இடைவெளி எடுப்பதாகவும், அவருக்கு வாழ்த்துகள் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.