லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகானை கமிட் செய்ய இருப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 


இது குறித்து லோகேஷ் கனகராஜ் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில்  பேசும் போது, “ அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். எனது அடுத்தப்படத்தில் அவருக்கு ஒரு சுவாரஸ்சியமான கதாபாத்திரத்தை வடிவமைத்து இருக்கிறேன். அவரிடம் இதைப்பற்றி நான் கேட்கவில்லை. சொல்லவும் இல்லை” என்றார். 


நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில்  ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக விகாசப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் நடிக்கும் முக்கியக் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் விஜயை சந்தித்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் உள்பட    ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்படும் பல புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.


 






இப்படத்தின் ஷூட்டிங் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் நிறைவடையும் எனக் கூறப்படும் நிலையில், அடுத்ததாக விஜய் - லோகேஷ் கனகராஜ்  இயக்க இருக்கும் படத்தில் இணைய இருக்கிறார்.  ‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு இந்தக்கூட்டணி மீண்டும் இணைவதால் இந்தப்படத்தின் மீதான  அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப்படத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில் படம் குறித்தான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன.


 






அந்தத்தகவல்களின் படி, விஜய் 50 வயது தாதா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், இதில் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பான் இந்தியா படமாக வெளியாக இருக்கும் இந்தப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், பிரித்விராஜ் நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின்  வில்லனாக நடிகர் அர்ஜூனை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. த்ரிஷாவை கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. சமந்தா பெயரும் ஒரு பக்கம் அடிபடுகிறது.