வித்தியாசமான தலைப்புகளை வைத்து , படமும் வித்தியாசமானது என திணிக்க வைக்கும் காலம் இது. அந்த வரிசையில் இணைந்ததா கடாவர்? கடாவர் என்பது, இறந்த பின் தனது உடலை பிறருக்கு உபயோகமாக, அதாவது மருத்துவ மாணவர்கள் அறிந்து கொள்ள வசதியாக வழங்கப்பட்ட உடலுக்கு கடாவர் என்கிறார்கள். அந்த கடாவருக்கு உரிய மரியாதை தர வேண்டுமாம். இது க்ளைமாக்ஸில் கூறப்படும் விளக்கமும், குறிப்பும். சரி, கதைக்கும், இதற்கும் தொடர்பில்லை என்பதால் கதைக்குள் போகலாம் வாங்க...


ஆட்டுத்தொட்டி போல எந்நேரமும் பிணங்களை உட்கூராய்வு செய்யும் பிணவறையில் போலீஸ் சர்ஜன் அமலா பால். திட்டம் போட்டு அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது. அதுவும் கொடூர கொலை. சிறையில் இருக்கும் ஒருவன், அடுத்தடுத்து கொலையாகப் போகும் நபர்களை வரைந்து முன்கூட்டியே எச்சரித்து கொலைகளை செய்கிறான். 






அவன் உள்ளே இருக்கும் போது, எப்படி வெளியே கொலைகள் நடக்கிறது. யார் இதற்கு உதவியாக இருக்கிறார்கள். கொலைக்கான காரணம் என்ன, என்கிற அடுத்தடுத்த சஸ்பென்ஸ்களுடன் நகரும் கதை தான் கடாவர். அமலா பால் தயாரிப்பில் வெளி வந்துள்ள இத்திரைப்படத்தில், அமலா நன்றாக நடித்திருக்கிறார். ஆதரவற்ற பெண், அவளை மணக்க ஒரு ஆண், எதிர்பார்த்தைப் போல் அவர் மரணம், அதற்கு காரணமான உறுப்பு திருட்டு என ,ஏற்கனவே தெரிந்த டெம்பிளேட் தான். ஆனால், அதை கொஞ்சம் முலாம் பூசி வேறுவிதமாக காட்ட முயற்சித்திருக்கிறார்கள்.






இன்ஸ்பெக்டருடன் சேர்ந்து கொலையாளியை தேடி அலையும் அமலா, இறுதியில், ‛அந்த குழந்தையே நீங்க தான் சார்...’ என்பது போல சஸ்பென்ஸ் உடைப்பதும், அதற்கு ஒரு ப்ளாஷ்பேக் போடுவதும், எடுத்த காட்சிகளை நியாயப்படுத்த முயற்சித்திருக்கிறார்கள். என்ன தான், குறைகளை அடுக்கினாலும், காட்சிகளில் நம்மை கட்டிப் போட்ட வரை இயக்குனர் அனூப் பனிக்கர் திறம்பட கையாண்டிருக்கிறார். த்ரில்லருக்கு தேவையான காட்சிகளை காட்டி, மிரட்டியிருக்கிறார். 


அதற்காக ‛சீன் பை சீன்’ அமலாவை குளோஸ்அப்பில் காட்டி, அவர் ஷாக் ஆவது போல ட்விஸ்ட் வைப்பதை தவிர்த்திருக்கலாம். கதாநாயகன் ஏன் இத்தனை ஆண்டுகள் சிறையில் இருக்கிறான் என்பதற்கான சரியான காரணம் இல்லை. கர்ப்பினி மனைவியின் நகையை பறித்து, தங்களை விபத்திற்குள்ளாக்கிய கொள்ளையர்களை விரட்டும் போது, அவர்களில் ஒருவன் விபத்தில் சிக்கி இறப்பதால், அவரை கைது செய்வதாக வைத்துக் கொண்டால், அது ஒரு விபத்து, அதற்கு இத்தனை ஆண்டு சிறை தண்டனையா? ஹீரோவின் லட்சியத்திற்காக கொலை செய்ய உதவும் கும்பல், அவரை ஜாமினில் எடுக்க முயற்சிக்காதது ஏன்? இப்படி பல லாஜிக் கேள்விகளை எழுப்பலாம். 






ஆனால், சினிமாவில் மேஜிக் பார்க்கலாமே தவிர, லாஜிக் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பார்கள் என்பதால், அவற்றை எல்லாம் கடந்து விடலாம். எல்லா கதாபாத்திரங்களுமே நன்றாக நடித்திருக்கிறார்கள். படுமோசம் என்றெல்லாம் ஒதுக்கி வைத்து விடக்கூடிய படமல்ல. கொஞ்சம் மிரட்டலும், அரட்டலும் இருக்கிறது. பார்த்து மகிழலாம். டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியாகியுள்ள இந்த திரைப்படம், க்ரைம் த்ரில்லர் விரும்பிகளுக்கு விருந்தளிக்கும்.