கடந்த 2005 ஆம் ஆண்டு 13 ஆம் தேதி கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கனா கண்டேன் திரைப்படம் வெளியானது. இன்று கே.வி.ஆனந்த் உயிரோடு இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் இது அவருக்கு 18 ஆவது ஆண்டாக இருந்திருக்கும்.தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமான ஒரு கதை தேர்வுகளையும் கதைசொல்லும் முறையையும் கையாண்டவர் கே.வி.ஆனந்த். அவரது திரைப் பயணத்தை இன்றைய நாளில் நினைவு படுத்துவது அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாகவும் அமையும். 


பத்திரிகையாளர்


திரைப்படங்களுக்கு வருவதற்கு முன் கே.வி ஆனந்த் என்ன வேலை செய்தார் என்று சிலருக்கு தெரிந்திருக்கு வாய்ப்பிருக்கிறது. அறியாதவர்களுக்கு இது ஒரு புதிய தகவல். லயோலா கல்லூரியில் காட்சி தொடர்பியல் முடித்த கே.வி.ஆனந்த் பத்திரிகைகளில் ஃபோட்டோ ஜர்னலிஸ்டாக வேலை செய்தார். கல்கி,இந்தியா டுடே என மொத்தம் 200 பிரபலமான இதழ்களில் இவர் எடுத்தப் புகைப்படங்கள் முகப்புப் படமாக வெளிவந்திருக்கின்றன. சுமார் 20 முதலமைச்சர்களை அருகில் இருந்து ஃபோட்டொ எடுத்திருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.


ஒளிப்பதிவாளர்


இதனைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் கே.வி.ஆனந்த். கோபூர வாசலிலே, அமரன் ,மீரா உள்ளிட்ட படங்களில் பி.சி.ஸ்ரீராமிற்கு உதவியாக இருந்த கே.வி.ஆனந்த், பி.சி.,யின் பரிந்துரையின் பேரில்  மலையாளப் படமான தென்மாவின் கொம்பத் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இந்த படத்திற்கான சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை வென்றார் கே.வி ஆனந்த். தமிழில் கே.வி ஆனந்த் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகியப் படம் காதல் தேசம். இதனைத் தொடர்ந்து ஷங்கர் போன்ற பல முதன்மையான இயக்குனர்களுடன் சேர்ந்து வேலை செய்திருக்கிறார்.


இயக்குநர்


கனா கண்டேன் திரைப்படத்தின் வழியாக. இயக்குநராக கே வி ஆனந்த் அறிமுகமானார்.ஒரு இயக்குனராக கே.வி ஆனந்தின் கதை தேர்வு என்றும் புதுமையானதாக இருந்திருக்கிறது.


அயன்


சூர்யாவை வைத்து இவர் இயக்கியப் படம் அயன்.கடத்தல் தொழில் குறித்து அதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திராத  நிறைய புது விஷயங்களை காட்டியிருப்பார். தண்ணீர் பாட்டிலில் வைரத்தை பதித்து கடத்துவது, தலையில் வைரம் கடத்துவது என இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு சர்ப்ரைஸ் ஒளிந்துகொண்டு இருக்கும்.சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான ஒரு படமாக அயன் என்றும் இருக்கும்.


கோ


கே.வி ஆனந்திற்கு பத்திரிகைத் துறைமேல் எப்போதும் ஆர்வம் அதிகம் இருந்து வந்திருக்கிறது. அதற்கு சான்றாக கவண்,கோ போன்ற படங்களை சொல்லலாம்.ஒரு பத்திரிகை நிறுவனத்திற்குள் நடக்கும்  பல்வேறு உண்மைகளை மிக சுவாரஸ்யமாக கதையுடன் இணைத்திருப்பார் கே வி ஆனந்த்.


மாற்றான், அனேகன்,காப்பான்


சூர்யாவை வைத்து மாற்றான்,காப்பான், தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன்ஆகியப் படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் இந்த படங்களிலும் கே.வி.ஆனந்த் டச் என்று நாம் எப்போதும் சொல்லும் அம்சம் இருக்கத்தான் செய்கிறது.கே.வி ஆனந்த் இன்று நம்முடன் இருந்திருந்தால் நிச்சயமாக பல சுவாரஸ்யமான படங்களை நமக்கு கொடுத்திருப்பார். அது நடக்காதது தமிழ் சினிமாவிற்கு ஒரு இழப்புதான்.