கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பரபரப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமைய்யா கூலாக சாலையோர கடையில் காஃபி குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்த மே 10 ஆம் தேதி கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்த நிலையில், சுமார் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கர்நாடகாவில் களைக்கட்டிய தேர்தல் திருவிழாவால் அடுத்து ஆட்சிக்கு வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவே இருந்தது.
இதனால் அக்கட்சி தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அதற்கு ஏற்றாற்போல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் அமைந்துள்ளது. 224 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெல்ல வேண்டும். தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 110க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 70க்கும் அதிகமாக தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனால் பெரும்பான்மையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகள் எந்த நேரத்திலும் மாறலாம் என்பதால் தேர்தல் முடிவுகள் நிமிடத்திற்கு நிமிடம் கவனிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே வருணா சட்டமன்ற தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சரான சித்தராமையா வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் சோமன்னாவை விட முன்னிலை வகித்து வருகிறார்.
இதற்கிடையில் மைசூருவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்குச் செல்வதற்கு முன் சித்தராமையா சாலையோர காஃபி ஷாப்பில் கூலாக காஃபி அருந்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து அவர் வாக்கு எண்ணும் மையத்தில் சென்று ஆய்வு செய்தார்.