கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக தலைவர்கள் பசவராஜ் பொம்மை, பிரியங்கா காந்தி, குமாரசாமி, சிவக்குமார் உள்ளிட்ட பலர் கோயில்களில் வழிபாடு நடத்தினர்.
கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. சுமார் 73.19 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் அங்கு ஆட்சிக்கு வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதில் ஆளும் கட்சியான பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டு, காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறின. அதேவகையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மே 13ஆம் தேதியான இன்று, காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆரம்பம் முதலே காங்கிரஸ், பாஜக இடையே இழுபறி இருந்த நிலையில், 11 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 100க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலைபெற்றுள்ளது. தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என தெரிவித்துள்ள நிலையில், அதே நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உள்ளன. இதனையொட்டி காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக, மஜத தலைவர்கள் பசவராஜ் பொம்மை, பிரியங்கா காந்தி, குமாரசாமி, சிவக்குமார் உள்ளிட்ட பலர் கோயில்களில் வழிபாடு நடத்தினர்.
குறிப்பாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஹூப்பள்ளியில் உள்ள அனுமன் கோயிலில் வாக்குப் பதிவு அன்று பிரார்த்தனை செய்தார். அதேபோல் இன்றும் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டி வழிபாடு மேற்கொண்டார்.
அதேபோல கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான குமாரசாமி, தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என பெங்களூருவில் உள்ள கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, ஷிம்லாவில் உள்ள ஜக்கு கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.
முன்னதாக, கர்நாடகத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் சாமி தரிசனம் செய்தார்.