முத்து படத்தின் கதையை அப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் சொல்ல சென்றபோது என்ன நடந்தது என்பதை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் இயக்கத்தில் ரஜினிகாந்த், சரத்பாபு, மீனா, ரகுவரன், ராதா ரவி, வடிவேலு, செந்தில், விசித்ரா, சுபாஸ்ரீ, ஜெய பாரதி உள்ளிட்ட பலரும் நடித்த படம் “முத்து”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் 28 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும், டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் வருவதை முன்னிட்டும் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் அந்த படம் உருவான விதம் பற்றி பல தகவல்களை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பேசியிருக்கிறார்.
அதில், ஒரு தகவலாக ஏ.ஆர்.ரஹ்மானிடம் முத்து படத்தின் கதையை சொல்ல சென்றபோது என்ன நடந்தது என்பதை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
ரோஜா படம் வெற்றி பெற்று ஏ.ஆர்.ரஹ்மான் செம பிஸியாக இருக்கிறார். அப்ப எனக்கு முத்து படம் பண்ணும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த பக்கம் ரஜினி, அந்த பக்கம் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நான் இணைந்த முதல் படம். நான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் முத்து படத்துக்காக கதை சொல்ல போகிறேன். ஏற்கனவே ரஜினி சார் சொன்ன ஒன்லைனை வைத்து நிறைய நாள் கதை சொல்லி, அவருடன் இணைந்து பயணம் செய்திருந்தேன். அதனால் அவர் இல்லாமல் நான் மட்டும் கதை சொல்ல சென்றிருந்தேன். கதையை ஆரம்பிக்கும்போது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. யார் என்று பார்த்தால், அங்கே ரஜினி சார் வந்து நிற்கிறார். என்ன சார் இந்த பக்கம் என கேட்டால், சும்மா, நானும் ஒரு தடவை புதிதாக கதைக் கேட்டு என்னை தயார் பண்ணி கொள்கிறேன் என சொன்னார்.
ஏ.ஆர்.ரஹ்மானிடம் நானும், ரஜினியும் ஒருவரை பற்றி ஒருவர் புகழ்ந்து கொள்கிறோம். இரண்டு பேர் முன்னாடி எனக்கு கதை சொல்லவே தடுமாற்றமா இருந்துச்சு. எதாவது சொல்ல மறக்கும்போது, ‘அங்க அதை விட்டுட்டீங்களே, இங்க இதை விட்டுட்டீங்களே’ன்னு ரஜினி எடுத்து கொடுக்குறாரு. எனக்கு அப்படியே உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. என்னடா இது நமக்கு மறந்தது எல்லாம் ஒரு ஹீரோவா எடுத்து கொடுக்குறாரேன்னு தோணுச்சு. அதுக்கு காரணம் முதல் முறையா ஒரு பெரிய பிரபலத்தோட வேலை செய்யப்போறோம் என்கிற பரபரப்பு தான். ஆனால் நான் ரஹ்மானிடம் மட்டும் பேசியிருந்தால், அவர் என்னை விட வயது குறைவு என்பதால் கதையை கூலாக சொல்லியிருப்பேன்.