மிக்ஜாம் புயலில் சிக்கிய மக்களை மீட்ட தன்னார்வலர்களையும், காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்களை திரைத்துறை பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். 


கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக டிசம்பர் 3 ஆம் தேதி மாறியது. இதனால் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னையில் கிட்டதட்ட 24 மணி நேரத்துக்கும் அதிகமாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த புயலானது ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகேயுள்ள பாபட்லா என்னும் இடத்தில் நேற்று கரையை கடந்தது.


இந்த புயலால் பெய்த கனமழையால் சென்னையின் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதேபோல் நீர்நிலைகளையொட்டியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் உயிரை காத்துக் கொள்ள வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்தனர். நேரம் செல்ல செல்ல சூழலும் மிக மோசமாக மாற தொடங்கியது. அனைத்து இடங்களிலும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. 


பால், தண்ணீர், உணவு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். மழை நிற்காமல் பெய்தது மீட்பு பணிகளை மேலும் தாமதப்படுத்தியது, பல இடங்களிலும் மழையும் பொருட்படுத்தாமல் மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். செல்போன் சிக்னல்கள் கிடைக்காததால் உதவி கேட்டு கூட யாரையும் தொடர்பு கொள்ளாத நிலை ஏற்பட்டது. இப்படியான நிலையில் இன்னும் பல இடங்களில் வெள்ளநீர் வடியவில்லை. அங்குள்ள மக்கள் அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


வழக்கம்போல இந்த பெருவெள்ளமும் சாதி, மதங்களை விட மனித நேயமே பெரிது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது. வழிபாட்டு தலங்கள் மட்டுமல்லாது பலர் தங்கள் இல்லங்களிலும் தங்கிக்கொள்ள கூறி உதவ முன்வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அரசு ஊழியர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் தாண்டி மீட்பு பணியில் ஏராளமான தன்னார்வலர்களும் ஈடுபட்டனர். உதவி கேட்டவுடன் அடுத்த சில மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, அவர்களுக்கு உணவளிப்பது உள்ளிட்ட பல தேவைகளை பூர்த்தி செய்தனர். 


இப்படியான நிலையில் வெள்ளப் பாதிப்பில் மக்களை மீட்க உதவிய அரசு ஊழியர்கள், காவல்துறையினர், தன்னார்வலர்களுக்கு திரைத்துறை பிரபலங்களான விஜய் டிவி புகழ், நடிகை ஆத்மிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலரும் நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டு வருகின்றனர்.