இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் அஜித்துடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றில் இருந்து சிலவற்றைக் கொடுத்திருக்கிறோம்..


இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், `அஜித் மிகச் சிறந்த மனிதர்.. மனதில் பட்டதை நேரடியாகப் பேசக்கூடியவர். நாங்கள் ராமோஜி ஃப்லிம் சிட்டியில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது சிலர் வீடியோ கேமரா எடுத்துக் கொண்டு அவரைப் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து ஆங்கிலத்தில் `யார் நீங்கள்?’ எனக் கேட்டார். `நாங்கள் மீடியா’ என்றார்கள்.. மேலும், `இந்த ஸ்டூடியோவின் உரிமையாளர்களும் நாங்கள்தான்’ எனவும் அவர்கள் சொன்னார்கள். உடனே அஜித், `நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனால் இப்போது இந்த ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த நாங்கள் பதிவு செய்து வாடகை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.. நீங்கள் யாரிடம் கேட்காமல் வீடியோ எடுப்பதை அனுமதிக்க முடியாது.. கெட் அவுட்’ என்றார்’ என்று கூறியுள்ளார். 



தொடர்ந்து அவர், `ராமோஜி ஃப்லிம் சிட்டியுடைய மீடியா நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.. ஆனால் அனுமதி வாங்காமல் படம் பிடித்ததால், அவர்கள் வெளியேறினால்தான் நான் நடிப்பேன் எனக் கூறிவிட்டார் அஜித்.  அத்தனை கண்டிப்பு மிக்க மனிதர் அஜித். அதே நேரம் இன்னொரு பக்கம் அத்தனை கனிவு கொண்ட நபராக இருப்பார் அவர். படப்பிடிப்பில் யாருக்கேனும் ஏதேனும் நிகழ்ந்தால், முதல் ஆளாக அவர்களைப் பார்த்துக் கொள்பவராக நடந்துகொள்வார். தனக்கு எது சரியென நினைக்கிறாரோ, அதை நேரடியாக வெளிப்படுத்தக்கூடியவர். யார் எப்படி நினைப்பார்கள் என்பது பற்றி கவலைப்படமாட்டார். `யார் என்ன நினைத்தால் என்ன, என்னைப் பொருத்தவரை நான் சரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. அதை அப்படியே தொடர்வேன்.. இதில் தவறு என்ன இருக்கிறது?’ எனப் பேசக்கூடியவர் அஜித்.


`வில்லன்’, `வரலாறு’ ஆகிய இரண்டு படங்களிலும் எதற்கு இந்தக் காட்சி என்று தலையிட்டுப் பேசாதவர்.. சந்தேகங்கள் கூட கேட்காமல், எந்தத் தலையீடும் இல்லாமல் நடித்துக் கொடுப்பார். கதையும், திரைக்கதையும் சொல்லிவிட்டால் போதும்.. மற்ற நடிகர்கள் தங்கள் இமேஜைக் காக்க கேள்வி எழுப்புவார்கள்.. அது தவறு இல்லை. ஆனால் இவரது பாணி வித்தியாசமானது.. நாம் ஏன் அதில் தலையிட வேண்டும் என எண்ணக் கூடியவர்’ என்று தெரிவித்துள்ளார்.


மேலும், `ஏற்கனவே தங்களை நிரூபித்த பெரிய இயக்குநர்களிடம் அஜித் எதுவும் கேட்பதில்லை.. மற்ற இயக்குநர்களிடம் அவ்வாறு கேட்பார் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை. ஏதேனும் நடித்துக் காட்டினால், `இன்னொரு முறை நடித்துக் காட்டுங்கள் சார்’ என்பார்.. இரண்டு முறை பார்த்தவுடன் அதேபோல செய்வார். `வரலாறு’ படத்தில் க்ளைமாக்ஸ் போர்ஷன்களை 7 நாள்களில் தன் முழு உழைப்பையும் தந்து நடித்தார்.. 24 மணிநேரமும் படப்பிடிப்புக்காகவே அர்ப்பணித்தார்’ என்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.