தில் படத்தில் இடம்பெற்ற “உன் சமையல் அறையில்” பாடல் உருவான கதையை இயக்குநர் கரு.பழனியப்பன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


தில் படம்


2001  ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் விக்ரம், லைலா முதன்மை கேரக்டரில் நடித்த ‘தில்’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வித்யாசாகர் இசையமைத்த இந்த படத்தில் ஆஷிஸ் வித்யார்த்தி, விவேக், தீபா வெங்கட், மயில்சாமி, வையாபுரி, பாண்டு, சாருஹாசன், கலைராணி, பெஃப்சி விஜயன் என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர். இந்த படத்தின் பாடல்களை பா.விஜய், கபிலன், அறிவுமதி ஆகியோர் எழுதியிருந்தனர். இதில் கபிலன் எழுதிய “உன் சமையல் அறையில் நான் உப்பா? சர்க்கரையா?” பாடல் எவர்க்ரீன் ஹிட்டடித்தது. அருமையாக அமைந்த இந்த பாடல் உருவானதே பெரிய கதை தான். 


உன் சமையல் அறையில் பாடல் கதை


நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன், “வித்யாசாகர் எந்த படத்தில் மெலடி பாடல் போட்டிருந்தாலும் இது நமக்கு போட வேண்டிய பாடல் தானே என்ற எண்ணம் தான் எனக்கு தோன்றும். தில் படத்தில் இடம் பெற்ற உன் சமையல் அறையில் பாடல் கேட்ட அன்றைக்கே எனக்கு பிடித்து விட்டது. தில் படம் முடியும் முன்பே தனியாக படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் நான் தரணியிடம் இருந்து சென்று விட்டேன். தரணிக்கு எப்பவுமே பாடல்கள் பரபரப்பாக இருக்க வேண்டும்.



அதனால் தில் படத்தில் மெலடியாக இடம்பெற்ற உன் சமையல் அறையில் பாடல் வேண்டாம் என நினைத்திருந்தார். எனக்கோ இப்படி ஒரு பாட்டு நம் படத்தில் இல்லையே என பொறாமையாக இருக்கிறது. படமே போலீஸ் கதை,அதில் போய் உப்பா, சர்க்கரையான்னு பாட்டு போட்டா எப்படின்னு தரணி சொல்லிகிட்டு இருந்தார். வித்யாசாகர் படத்தின் பாடல் அடங்கிய கேசட்டை தரணியிடம் கொடுத்து விட்டார். அவரோ ரொம்ப நன்றினா என சொல்லிவிட்டு, அந்த உன் சமையல் அறையில் பாட்டை மாற்றி விடலாமா என கேட்டார். ஆனால் வித்யாசாகர் எனக்காக அந்த ஒரு பாட்டை விட்டுடுங்க என தரணியிடம் சொல்கிறார். நான் தற்செயலாக அந்த பக்கம் சென்ற நிலையில் இருவருக்குமிடையேயான உரையாடலை கேட்டேன். 


நான் தரணியிடம், அந்த பாட்டை ஏன் வேண்டாம் என சொல்கிறீர்கள் என கேட்க, நீ வச்சுக்கோடா என அவர் சொல்கிறார். தில் படத்தின் ஆல்பம் வெளியான பிறகு உன் சமையல் அறையில் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. தயாரிப்பாளர் அந்த பாடலை எப்படியாவது ஷூட் செய்து விடுங்கள் என சொல்லி விட்டார். நீங்கள் படத்தில் பார்த்தால் சம்பந்தமில்லாமல் தனியாக விக்ரம், லைலாவை வைத்து கொடைக்கானலில் அந்த பாடலை படமாக்கியிருப்பார்கள். எப்படியாவது பாடலை கழட்டி விட நினைத்த தரணிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது” என தெரிவித்திருந்தார்.