சாமி மற்றும் சிங்கம் படங்களுக்கு அப்புறம் சரியான ஒரு ஆக்‌ஷன் படமாக ரத்னம் இருக்கும் என இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார். 


ரத்னம்:


தாமிரபரணி,பூஜை ஆகிய 2 படங்களுக்கு பிறகு விஷாலுடன் இயக்குநர் ஹரி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் “ரத்னம்”. இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர், சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன், யோகிபாபு என பலரும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுக்க வாகனம் ஒன்று ரத்னம் பற்றி மக்களிடம் விளம்பரப்பட உள்ளது. 


60 சதவீதம் பேர் கெட்டவர்கள்:


இதன் தொடக்க விழாவில் பேசிய இயக்குநர் ஹரி, “ரத்னம் என்னுடைய 17வது படம். சாமி மற்றும் சிங்கம் படங்களுக்கு அப்புறம் சரியான ஒரு ஆக்‌ஷன் படம் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அதுவந்து ரத்னம் படத்தில் கொடுத்திருக்கிறேன் என நினைக்கிறேன். விரட்டி விரட்டி அடிக்க வேண்டும், தூக்கி போட்டு மிதிக்க வேண்டும் என சொல்லும்போது ஒரு வெறி ஒன்று வர வேண்டும் அல்லவா. அந்த வெறியை ரத்னம் படம் பார்த்து தணித்துக் கொள்ளலாம். இன்றைக்கு ரோட்டில் செல்லக்கூடிய 100% மக்களில் 60 சதவிகிதம் பேர் கெட்டவர்கள். 40 சதவிகிதம் பேர் தான் நல்லவர்கள். கெட்டவர்களிடம் இருந்து நல்லவர்களை காப்பாற்ற வேண்டும். அது போலீசால் அல்லது ஹீரோவால் தான் முடியும். 



அப்படிப்பட்ட சினிமாவை தான் நான் ரத்னம் படமாக எடுத்திருக்கேன். அநியாயத்தை தட்டி கேட்பது இன்றைய ட்ரெண்டிங்கில் எப்படி என்பதை தான் நான் எடுத்துள்ளேன். தமிழ்நாடு முழுவதும் ரத்னம் படம் தொடர்பான விளம்பரங்கள் செய்யப்போகிறோம். எப்படி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு மக்களை ஓட்டுப்போட வரவழைக்கிறோமோ, அதேமாதிரி படம் பற்றி எடுத்துச் சொல்லி வர வைக்க இருக்கிறோம். இந்த படத்தின் சென்சார் முடிந்ததும் மாவட்ட வாரியாக படக்குழுவினரும் தியேட்டர் நிர்வாகிகளை சந்திக்கவிருக்கிறோம். ரத்னம் படம் விறுவிறுப்பான ஆக்‌ஷன் நிறைந்ததாக இருக்கும். 


துப்பறிவாளன் படத்துக்காக வெளிநாட்டுக்கு சென்று லொகேஷன் எல்லாம் பார்த்து விட்டு விஷால் நேற்று தான் தமிழ்நாடு திரும்பினார். அவருக்கு தொண்டை வலி இருப்பதால் அடுத்தடுத்த ப்ரோமோஷன்களில் கலந்து கொள்வார்” என இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.




மேலும் படிக்க:  Andrea Jeremiah: நடிகை கவர்ச்சியா இருந்தா ரசிங்க; அதுல என்ன தப்பு! ஓபனாக பேசிய ஆண்ட்ரியா!