சண்டை காட்சிகளில் மட்டுமல்ல சாதாரண காட்சிகளிலும் கூட ஒரு பரபரப்பு வேண்டும் என நினைப்பதாக இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார். 


யானை படத்துக்கு பிறகு இயக்குநர் ஹரி நடிகர் விஷாலை வைத்து “ரத்னம்” படத்தை இயக்கியுள்ளார். தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு அவர் 3வது முறையாக விஷாலுடன் இணைந்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள ரத்னம் படத்தில் பிரியா பவானி ஷங்கர், யோகிபாபு, சமுத்திரகனி என பலரும் நடித்துள்ளனர். இந்த படம் இன்று தியேட்டரில் வெளியாகிறது. முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான ரத்னம் பட ட்ரெய்லர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இருந்தது. 


நீண்ட நாட்களாக தனக்கான வெற்றிக்காக போராடி வரும் இயக்குநர் ஹரி மீண்டும் ஜெயிக்க வேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. இதனிடையே ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குநர் ஹரியிடம், ‘முதலில் குடும்பத்தோடு படம் பார்க்க சென்றார்கள். இன்றைக்கு இளைஞர்கள் தான் தியேட்டருக்கு அதிகம் செல்கிறார்கள். இப்ப உள்ள இயக்குநர்கள் இளைஞர்களை கவரும் வண்ணம் படம் எடுக்கிறார்கள். நீங்கள் பலமுறை இயக்குநர்களை பார்த்திருக்கிறீர்கள். இதில் லோகேஷ் கனகராஜ் போன்ற தலைமுறையை எடுத்து கொண்டு, ஒரு படத்துல ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என நினைக்கிறீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 


அதற்கு, “இதை எனக்கு வார்த்தைகளால் சொல்ல தெரியவில்லை. நான் எந்தெந்த சீசனில் படம் பண்ணுகிறனோ, அந்த நேரத்தில் இருக்கும் இயக்குநர்களை ரசித்து முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வேன். நான் முதன்முதலில் படம் பண்ணும்போது என்னுடைய குருநாதர்களை மாஸ்டராக எடுத்துக் கொண்டேன். இப்போது லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ போன்றவர்களை எடுத்துக்கொள்கிறேன். இவர்கள் ஒவ்வொரு காட்சியை எடுக்க எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பது புரிகிறது. நம்முடைய கதையை அவர்களின் படங்களை போல எப்படி ரசிகர்களுடன் இணைப்பது போன்றவை தான் கூர்ந்து கவனிப்பேன். இதனால் மறைமுகமாகவே அந்த இயக்குநர்கள் படைப்புகள் என்னுள் பதிந்து விடுகிறது. அதை வைத்து தான் மேக்கிங்கில் ரத்னம் படத்தின் சில காட்சிகள் வைத்துள்ளேன். 


முதலில் கதை வேகமாக இருந்தால் பிடித்தது, இப்போது பிடிக்கவில்லை. திரைக்கதையே ஒரு ஸ்பீடாக இருக்க வேண்டும் தான் நான் நினைக்கிறேன். சண்டை காட்சிகளில் மட்டுமல்ல சாதாரண காட்சிகளிலும் கூட ஒரு பரபரப்பு வேண்டும் என நினைக்கிறேன்” என இயக்குநர் ஹரி கூறியுள்ளார்.