Lok Sabha Electon 2024 phase 2 polling: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவையொட்டி, முக்கிய மாநிலங்களில் நிலவும் தேர்தல் சூழல் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

மக்களவை தேர்தல் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு:

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில்,  முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து இன்று  அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் கவனம் ஈர்த்துள்ளன. 

கேரள நிலவரம்:

முதல் கட்டத்தில் தமிழகத்தைப் போலவே இரண்டாம் கட்டத்தில் கேரளா, பாஜகவிற்கு கடும் சவாலான மாநிலமாக அமைந்துள்ளது. தேர்தல் பரப்புரையின் போது கூட, மற்ற மாநிலங்களை போல கேரளாவில் பாஜக தலைவர்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும், இந்தமுறை எப்படியும் அங்கு தனது வெற்றிக் கணக்கை தொடங்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து, பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரை எதிர்த்து, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். 

கர்நாடக நிலவரம்:

மற்றொரு தென் மாநிலமான கர்நாடகாவும் இந்த முறை பாஜகவிற்கு இந்த முறை சற்று கடும் நெருக்கடியை தரக்கூடும். காரணம் தற்போது அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதோடு, மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை, காங்கிரஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தனது ஆட்சியை கவிழ்த்த பாஜக உடனேயே குமாரசாமி கூட்டணி வைத்து இருப்பது அம்மாநில அரசியலில் சற்று அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா:

முன்னாள் பாஜக கூட்டாளியான உத்தவ் தாக்கரே இப்போது மகாராஷ்டிராவில் I.N.D.I.A. கூட்டணிக்கு தலைமை தாங்குகிறார்.  அதே நேரத்தில் ஒரு காலத்தில் அவரது தலைமையில் இருந்த சிவசேனா, தற்போது முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் கீழ் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவரான சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பிளவுபட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அங்கீகரித்த தேசியவாத காங்கிரஸ்  துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையில் பாஜகவுடன் இணைந்துள்ளது. இதனால் மற்ற மாநிலங்களை விட, மகாராஷ்ட்ரா அரசியல் சூழல் களேபரமாக உள்ளது.

அதேநேரம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில், பாஜக மிகவும் வலுவாக உள்ளது.

மாநிலம் / யூனியன் பிரதேசம் தொகுதிகள்
அசாம் 5
பீகார் 5
சத்தீஸ்கர் 3
ஜம்மு & காஷ்மீர் 1
கர்நாடகா 14
கேரளா 20
மத்தியபிரதேசம் 6
மகாராஷ்டிரா 8
மணிப்பூர் 1
ராஜஸ்தான் 13
திரிபுரா 1
உத்தரபிரதேசம் 8
மேற்குவங்கம் 3

 

நட்சத்திர தொகுதிகள்:

  • மதுரா தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி வாகை சூடும் நோக்கில், நடிகை ஹேமா மாலினி களமிறங்கியுள்ளார்.
  • மீரட் தொகுதியில் ராமாயணம் இதிகாச தொடரில் நடித்து பிரபலமான அருண் கோவிலை பாஜக களமிறக்கியுள்ளது.
  • பீகாரில் உள்ள புர்னியா தொகுதியில் பப்பு யாதவ் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்
  • பாஜகவின் வயநாடு தொகுதியில் மும்முனைப்போட்டி நிலவுகிறது. அதன்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சிபிஐ கட்சி சார்பில் ஆனி ராஜா மற்றும் கேரளா மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் வேட்பாளர்களாக களம் காண்கிறது. கடந்த தேர்தலிலும் ராகுல் காந்தி இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
  • வயநாடை போன்று திருவனந்தபுரத்திலும் மும்முனைப் போட்டி நிலவுகிறது. தற்போதைய எம்.பி., ஆன காங்கிரஸின் சசி தரூர், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் சிபிஐ கட்சியின் மூத்த தலைவர் பன்னயன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.