ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதை தொடர்ந்து அடுத்தடுத்து பல அப்டேட்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளிவந்து ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில் அவர் வலிமை மற்றும் துணிவு தொடர்பான பல கேள்விகளுக்கு துணிவு படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் பதிலளித்தார். அதில் அவர் கூறியது இங்கே!
வலிமை படத்தின் கலவையான விமர்சனங்கள் உங்களை எப்படி பாதித்தது?
வலிமை படத்திற்காக எங்கள் மொத்த டீமும் நிறைய உழைத்தது. ஆனால் சில சமயங்களில், எவ்வளவு கவனமாக இருந்தாலும், வேலையில் பிழை வந்துவிடுகிறது. படம் நியாயமற்ற முறையில் விமர்சிக்கப்படுகிறது என்று நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதே நேரத்தில் எனது மற்ற படங்களை மக்கள் ரசித்து, அவர்களின் சொந்த எதிர்பார்ப்புகள் இருப்பதையும் உணர்ந்தேன்.
படம் வெளியான முதல் இரண்டு நாட்களில் நான் குழப்பத்தில் இருந்தேன் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் மூன்றாவது நாளுக்குப் பிறகு, சொல்ல நினைத்த செய்தி குடும்பப் பார்வையாளர்களை சென்று சேர்ந்தது என்பதை நாங்கள் இறுதியாக உணர்ந்தோம். முதல்வர் கூட போதைப்பொருள் ஒழிப்பு பற்றி பேசினார். அந்த வகையில் படம் நினைத்த வேலையைச் செய்தது என்றுதான் சொல்வேன்.
இரண்டாவது விஷயம், படத்தின் மீது ரசிகர்களிடம் இருந்த எதிர்பார்ப்பு. COVID காரணமாக படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்ததால், படத்தின் தன்மை குறித்து பல எதிர்பார்ப்புகள் எழுந்தன. எதிர்பார்ப்புகளால் படத்தின் உண்மையான யதார்த்தத்தை பூர்த்தி செய்ய முடியாத நிலையை எட்டியது.
என்னுடைய ஒரே வருத்தம் என்னவென்றால், படத்தின் வலிமையைப் பற்றி யாரும் பேசவில்லை, குறைகளைப் பற்றி மட்டுமே பேசினார்கள்.
படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார் என்பது உண்மையா?
இந்த கேள்விக்கு நான் பதிலளித்தால், மக்கள் மீண்டும் படத்தை பற்றி வேறுவிதமாக கற்பனை செய்ய தொடங்குவார்கள். ‘ஆம்’ என்று சொன்னால், ‘அப்போ மங்காத்தா வா?” என்று கேட்பார்கள். பார்வையாளர்கள் பார்க்க விரும்பும் அனைத்தையும் படம் கொண்டுள்ளது என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும்.
அஜித்துடன் மூன்று படங்களில் பணிபுரிந்து விட்டீர்களே?
அஜீத் சாரின் கவனம் எப்போதும் மற்றவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுகிறார்களா என்று பார்ப்பதில்தான் இருக்கும். நான் அவருடன் அரசியல் பற்றி பேசியதில்லை. நாங்கள் உண்மையில் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி பேசமாட்டோம். யாராவது அப்படி பேச முயன்றாலும், அந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம் என்று அவர் மரியாதையுடன் கூறிவிடுவார்.
உங்கள் அடுத்த படத்தை முடிவு செய்துவிட்டீர்களா? நீங்கள் கமல் மற்றும் தனுஷுடன் படங்கள் செய்கிறீர்கள் என்று ஒரு தகவல் வருகிறதே?
படம் ரிலீஸுக்கு முன்னாடி இது போன்ற பேச்சுக்கள் நடந்தாலும், படம் வெளியான பிறகுதான் தெளிவான பதில் கிடைக்கும். தற்போது, நான் யோகி பாபுவிடம் ஒரு கதையை சொல்லி இருக்கிறேன். அவரும் அதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அது எனது அடுத்த படமா என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது.” இவ்வாறு அவர் அந்த நேர்காணலில் கூறினார்.
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா