மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட(பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்ட (எம்.பி.சி.) மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறும் விண்ணப்பங்களைப் புதுப்பிக்க நாளை மறுநாள் கடைசித் தேதி ஆகும்.
கல்வி உதவித்தொகை:
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவித் தொகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவிகளுக்கு இலவசக் கல்வித் திட்டம் என்ற பெயரில் தமிழக அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. இலவசக் கல்வித் திட்டத்தின்கீழ் இந்தத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல முதுகலை, பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதன்மூலம் கல்விக் கட்டணம் முழுமையாக அரசால் வழங்கப்படும். அதேபோல புத்தகக் கட்டணம், தேர்வுக் கட்டணம், சிறப்புக் கட்டணம் ஆகியவையும் வழங்கப்படும்.
என்ன தகுதி?
சம்பந்தப்பட்ட மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால், கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே, கல்வி உதவித்தொகைக்கு 2022- 2023 ஆம் கல்வியாண்டில் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள், சென்னை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களையோ அணுகலாம்.
மேலும், http://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschems என்ற இணையதள முகவரியில் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து, ‘
ஆணையர்,
பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்,
எழிலகம், இணைப்பு கட்டடம், 2 வது தளம்,
சேப்பாக்கம், சென்னை-5,
தொலைபேசி எண்: 44-28551462’
என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
கடைசித் தேதி: புதிதாக விண்ணப்பிக்க 2023 ஜனவரி 30-ம் தேதி கடைசித் தேதி ஆகும்.
அதேபோல, ஏற்கெனவே விண்ணப்பித்து புதுப்பிக்க விரும்புவோருக்கு நாளை மறுநாள் (டிசம்பர் 6) கடைசித் தேதி ஆகும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணைய முகவரியைக் காண வேண்டும்.
தொலைபேசி எண்: 044-28551462
இ-மெயில்: tngovtiitscholarship@gmail.com
அதேபோல, பிற மாவட்டங்களில் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.